

சென்னை: அண்மையில் நடைபெற்ற இரவு மாரத்தான் ஓட்டத்தின்போது கிடைத்த பதிவுக் கட்டணத்தை, குழந்தைகள் நலப் பாதுகாப்புக்காக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் வழங்கினார்.
‘போதையில்லா தமிழகத்துக்காக ஓடு’ என்ற கருத்தை மையமாக வைத்து கடந்த 2-ம் தேதி ‘ஆவடி இரவு மாரத்தான்’ (பாகம் 2) ஓட்டம் நடைபெற்றது. ஆவடிவேல்டெக் பல்கலை. வளாகத்திலிருந்து இந்த ஓட்டம் தொடங்கியது. 21, 10, 5 கிமீ தூரம் என 3 பிரிவுகளில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
மீஞ்சூர் - வண்டலூர் வெளி வட்டச் சாலை வழியாக நடைபெற்ற ஓட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஓட்டப் பந்தய வீரர்கள், வெளிமாநிலம் மற்றும் வெளி நாட்டைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஓடினர். சென்னை காவல் ஆணையரகம், ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையரகம் இணைந்து இந்த மாரத்தான் ஓட்டத்தை நடத்தின.
இந்த மாரத்தான் ஓட்டத்தை சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்திருந்தார். வேல்டெக் பல்கலைக்கழகம், `தி இந்து', சென்னை ரன்னர்ஸ், வேலம்மாள் நெக்ஸஸ், சிபிசிஎல், பனிமலர் பொறியியல் கல்லூரி மற்றும் மெரிடியன் மருத்துவமனை போன்ற பல்வேறு பங்களிப்பாளர்களின் கூட்டு முயற்சியால் இந்த மாரத்தான் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப் பரிசுகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும் தொண்டு செய்யும் நோக்குடன் மாரத்தான் பங்கேற்பாளர்களிடமிருந்து குறைந்தபட்ச பதிவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அதில், கிடைத்த பணத்தில் ரூ.4 லட்சத்து 74 ஆயிரத்தை (காசோலை) சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் குழந்தைகள் நலப் பாதுகாப்புக்காக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நேற்று காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். குழந்தைகள் நல மருத்துவமனை ஆர்எம்ஓ வெங்கடேசன் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் கங்காதரன் ஆகியோர் காசோலையைப் பெற்றுக்கொண்டனர். கூடுதல் காவல் ஆணையர் ஆஸ்ரா கர்க் (வட சென்னை) உடனிருந்தார்.