Published : 06 Oct 2023 06:18 AM
Last Updated : 06 Oct 2023 06:18 AM
சென்னை: திருவொற்றியூர், ராயபுரம் தொகுதிகளில் ரூ.105.13 கோடியில் 579 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் திருவொற்றியூர் கிராமத் தெரு திட்டப் பகுதியில் ரூ.59.77 கோடியில் 336 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும், செட்டித் தோட்டம் திட்டப் பகுதியில் ரூ.45.36 கோடியில் 243 புதிய குடியிருப்புகளுக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று அடிக்கல் நாட்டினார்.
வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.சுதர்சனம், ஐட்ரீம் ஆர்.மூர்த்தி, கே.பி.சங்கர் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
அப்போது, அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: இந்த அரசு பொறுப்பேற்றவுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், இடியும் நிலையில் உள்ளபழைய குடியிருப்புகளை கணக்கெடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் 27,138 வீடுகளும் மற்றும் பிற மாவட்டங்களில் 3,354 வீடுகளும் மொத்தம் 30,492 பழைய வீடுகளை இடித்துவிட்டு புதிய வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டது.
2021-22 மற்றும் 2022-23 நிதியாண்டுகளில் ரூ.2,400 கோடியில் 15,000 புதிய வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி 30 திட்டப்பகுதிகளில் 7,582 வீடுகள் இடிக்கப்பட்டு ரூ.1627.97 கோடியில் 9,522 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் 10 திட்டப் பகுதிகளில் ரூ.668.7கோடி மதிப்பீட்டில் 3,907 புதிய குடியிருப்புகள் கட்டுமான பணிகள் நடக்கிறது.
இன்றைய தினம் 2 திட்டப்பகுதிகளில் ரூ.105.13 கோடியில் 579 புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தம் 12 திட்டப்பகுதிகளில் ரூ.773.83 கோடி மதிப்பீட்டில் 4486 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 திட்டப்பகுதிகளில் 854.05 கோடியில் 5,036 குடியிருப்புகளுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படவுள்ளது.
இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கெனவே இருந்த குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்றமக்களுக்கு வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT