Published : 06 Oct 2023 06:14 AM
Last Updated : 06 Oct 2023 06:14 AM

பல்லாவரம் அருகே தனியார் ஆக்கிரமித்திருந்த ரூ.600 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு

பல்லாவரம் சந்தை சாலையில் அரசுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலம் நேற்று மீட்கப்பட்டது. குத்தகை முடிந்தும் நிலத்தை உரிமையாளர் ஒப்படைக்காததால் பல்லாவரம் வட்டாட்சியர் ட்டி.ஆறுமுகம் தலைமையில் கட்டிடத்துக்கு சீல் வைக்கப்பட்டது. படம்: எம்.முத்துகணேஷ்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே தனியார் ஆக்கிரமித்திருந்த ரூ. 600 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. பல்லாவரத்தை அடுத்த கன்டோன்மென்ட் பல்லாவரம் பகுதியில் அரசுக்குச் சொந்தமான சர்வே எண்: 166/2 உடைய ஓர் ஏக்கர் 19,062 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலம் உள்ளது. அந்த நிலத்தை கடந்த பல ஆண்டுகளாக அதே பகுதியை சேர்ந்த எம்.எம். குப்தா என்பவர் ஆக்கிரமித்து, அதன் ஒரு பகுதியில் வீடு மற்றும் தொழிற்சாலை கட்டி, குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அத்துடன், அந்த இடத்தை திரைப்பட சூட்டிங் நடத்த வாடகைக்கு விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு அரசுக்குச் சொந்தமான அந்த நிலத்தை வணிக ரீதியாக பயன்படுத்தி வருவது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கடந்த ஆக. 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம், அரசு நிலத்தை மீண்டும் அரசிடம் ஒப்படைக்குமாறு, அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல்நாத் தனியார் ஆக்கிரமித்திருக்கும் அரசு நிலத்தை உடனடியாக மீட்டு நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நேற்று பல்லாவரம் வட்டாட்சியர் ட்டி. ஆறுமுகம் தலைமையில் வருவாய்த் துறை அதிகாரிகள், பல்லாவரம் போலீஸாரின் பாதுகாப்போடு, அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த இரண்டு வீடுகள் மற்றும் தொழிற்சாலை அடங்கிய மொத்த இடத்தையும் பூட்டி சீல் வைத்தனர்.

முன்னதாக அந்த இடத்துக்கான மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. பின்னர் அந்த இடத்தில் ‘அரசுக்குச் சொந்தமான இடம். அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று எச்சரிக்கை விளம்பர பதாகையும் வருவாய்த் துறை சார்பில் வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.600 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x