தமிழகத்தில் இந்து கோயில்களை அரசு ஆக்கிரமித்துள்ளதாக பிரதமரின் குற்றச்சாட்டு தவறானது: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

வள்ளலார்-200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.  இதில், ‘கடலூரில் அமைக்கப்பட உள்ள வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி, நிதி ஒப்புவிப்பு ஆணையை, வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழுவின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயரிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன், எம்.பி., மேயர் பிரியா, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், திருவாவடுதுறை ஆதீனம்  அம்பலவாண தேசிக சுவாமிகள் உள்ளிட்டோர்.       படம்: எஸ்.சத்தியசீலன்
வள்ளலார்-200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், ‘கடலூரில் அமைக்கப்பட உள்ள வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான நிர்வாக அனுமதி, நிதி ஒப்புவிப்பு ஆணையை, வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழுவின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயரிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். உடன் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன், எம்.பி., மேயர் பிரியா, குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக சுவாமிகள் உள்ளிட்டோர். படம்: எஸ்.சத்தியசீலன்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் இந்து கோயில்களை அரசு ஆக்கிரமித்துள்ளதாக கூறிய பிரதமரின் குற்றச்சாட்டு தவறானது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ‘வள்ளலார்-200’ ஓராண்டு தொடர் அறநிகழ்வின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.

விழாவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள வள்ளலார் சர்வதேச மையத்துக்கான ஆணையை, வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக்குழுவின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயரிடம் முதல்வர் வழங்கினார். அதைத்தொடர்ந்து முப்பெரும் விழாவைசிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியதற்காக சிறப்பு குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை சிறப்பித்துநினைவு பரிசுகளை வழங்கினார். ‘வள்ளலாரின் இறை அனுபவங்கள்’ என்ற நூலையும் வெளியிட்டார்.

தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வள்ளலாரின் முப்பெரும் விழா நிறைவான விழாவாகும். திமுக அரசு கருணையுள்ள ஆட்சி நடத்தி வருவதால் தான் கருணை வடிவான வள்ளலாரை போற்றுகிறோம். அதன் அடையாளமாக கடலூர் மாவட்ட தலைநகரில் 17 ஏக்கரில் அமைக்கப்படவுள்ள புதிய பேருந்து நிலையத்துக்கு ‘அருள்பிரகாச வள்ளலார்’ எனும் பெயர் சூட்டப்படவுள்ளது.

ஆன்மிக உணர்வை ஒரு கூட்டம் அரசியலுக்கு பயன்படுத்தி அதன்மூலம் குளிர்காய பார்க்கிறது. அரசியல் வேறு, ஆன்மிகம் வேறு என்பதை பகுத்தறிந்து பார்க்கும் பகுத்தறிவாளன் தான் தமிழகமக்கள். தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் பரப்புரைக்காக வருகை தந்த பிரதமர் மோடி, தமிழக கோயில்களை பற்றி பேசியிருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களை திமுக அரசு கைப்பற்றி, ஆக்கிரமித்துள்ளது. கோயில்சொத்துகள் மற்றும் அதன் வருமானங்களை முறைகேடாக அரசுபயன்படுத்தி வருவதாகவும் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக நான் மறுக்கிறேன். இதற்காக பிரதமர்மோடிக்கு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொறுப்புமிக்க இந்திய நாட்டின் பிரதமர் தவறான அவதூறு செய்தியை சொல்வது சரியானதா? ஒரு மாநிலத்தின் செயல்பாடு குறித்து இன்னொரு மாநிலத்துக்கு சென்று பேசுவதும் முறையா? திமுக ஆட்சிக்கு வந்த பிறகுகோயில் சொத்துகளை ஆக்கிரமித்துள்ளது போலவும், வருமானங்களை முறைகேடாக பயன்படுத்துவது போலவும் பொய்யான செய்திகளை இந்திய பிரதமர் ஏன் கட்டமைக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளில் தமிழகத்தில் ரூ.3,500 கோடி மதிப்புள்ள கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகள்பழமைவாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீரமைக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிதியாண்டில்மட்டும் 5,078 திருக்கோயில்களில் திருப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இவை எல்லாம் தவறா? எதை தவறுஎன்கிறார் பிரதமர் மோடி. பிரதமரின் பார்வையில் தான் தவறு இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, தயாநிதிமாறன் எம்.பி, இந்து சமய அறநிலையத் துறை செயலர் க.மணிவாசன், திருவாவடுதுறை ஆதீனம் பரமாச்சாரிய சுவாமிகள் அம்பலவாண தேசிகர், குன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞானபாலய தேசிகர், சூரியனார் கோயில் ஆதீனம் மகாலிங்கதேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in