Published : 06 Oct 2023 04:14 AM
Last Updated : 06 Oct 2023 04:14 AM
வேலூர்: அணைக்கட்டு அருகே சாலை விபத்தில் சிக்கிய தனியார் நிறுவன ஊழியரிடம் இருந்த ரூ.17.40 லட்சம் பணத்தை 108 ஆம்புலன்ஸ் பணியாளர் கள் பாதுகாப்புடன் ஒப்படைத்தனர்.
வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த காளாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்பும் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர், ஒடுக்கத்தூர் பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்தில் பணம் நிரப்ப தனது இரு சக்கர வாகனத்தில் ரூ.17 லட்சத்து 40 ஆயிரம் பணப் பையுடன் நேற்று பகல் 12 மணியளவில் சென்று கொண்டிருந்தார்.
ஒடுக்கத்தூர் அருகே கவுதம புரம் என்ற பகுதி வழியாக சென்ற போது காட்டுப் பன்றி குறுக்கே வந்தது. அதில், கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் கவிழ்ந்ததில் சுரேஷ் பலத்த காயம் அடைந்தார். அவ் வழியாக சென்ற பொது மக்கள் அவரை மீட்டதுடன் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், விபத்து நடந்த இடத்துக்கு 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் செல்வி மற்றும் ஓட்டுநர் பாண்டியன் ஆகியோர் விரைந்தனர். பலத்த காயமடைந்த சுரேஷை மீட்டதுடன், அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், சுரேஷின் உறவினர்கள் மற்றும் அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர் வைத்திருந்த பையில் ரூ.17 லட்சத்து 40 ஆயிரம் பணம் இருந்ததால் அவற்றை தனியார் நிறுவன மேலாளர் ராஜேஷ் என்பவரிடம் பாதுகாப்புடன் ஒப்படைத்தனர். விபத்தில் சிக்கியவரிடம் இருந்த ரூ17.40 லட்சம் பணத்தை பாதுகாப்புடன் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களை அனைவரும் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT