

கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்கவும், ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாகச் சீரமைக்கவும், இறந்துபோன மீனவ குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, கூடுதல் நிதியுதவி ஆகியவற்றை வழங்கக் கோரியும், மீட்புப்பணிகளில் மத்திய - மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், திமுக மீனவரணி சார்பில் நாளை (12.12.2017) சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், '"கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 623 மீனவர்கள் இன்னும் காணவில்லை", என்று அம்மாவட்ட ஆட்சி தலைவர் சாஜன் சிங் சவான் அறிவித்திருப்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் சோகங்களை எல்லாம் கண்டு கலங்கி இருப்போரை மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
"197 மீனவர்கள் காணவில்லை", என்று தலைமைச் செயலாளரும், "260 பேரை காணவில்லை", என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் முரண்பாடாகத் தெரிவித்திருந்த நிலையில், இப்போது மாவட்ட ஆட்சி தலைவரே 623 மீனவர்கள் காணவில்லை என்று கூறியிருப்பது, "ஒக்கி புயல்" தாக்குதல் முடிந்து 13 நாட்கள் கடந்த பிறகும், எத்தனை மீனவர்கள் மீட்கப்படவில்லை என்பது குறித்த துல்லியமான கணக்கீடு கூட இந்த 'குதிரை பேர' அரசிடம் இல்லை என்ற வெட்கக்கேட்டை வெளிப்படுத்தியுள்ளது.
"நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடற்கரையோரங்களில் கரை ஒதுங்கியுள்ள 2124 மீனவர்களை இன்னும் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதிருக்கிறது", என்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் அறிவித்தார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமோ, "2384 மீனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்", என்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "2570 மீனவர்களை மீட்க வேண்டியதிருக்கிறது", என்றார். அரசு செயலாளர் டி.கே.ராமச்சந்திரனோ, "3117 மீனவர்களை இன்னும் மீட்க வேண்டியதிருக்கிறது", என்று டிசம்பர் 10 ஆம் தேதி அறிவித்தார். வேறு மாநில கடற்கரையோரங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்களின் எண்ணிக்கையும் இந்த அரசுக்குத் தெரியவில்லை, காணாமல் போன மீனவர்களின் எண்ணிக்கையும் தெரியவில்லை.
இதன் மூலம், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டு வேறு மாநில கடற்கரையோரங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்களையும், ஆழ்கடலுக்குச் சென்று இதுவரை திரும்ப முடியாமல் போன மீனவர்களையும் மீட்கும் பணியில் மத்திய - மாநில அரசுகள் மிக மோசமான வகையில் அலட்சியம் காட்டுகின்றன என்பது வெளிப்படுகிறது.
ஆயிரம் மீனவர்களுக்கும் மேல் காணவில்லை என்று மீனவ தாய்மார்கள் குமுறி, ஆங்காங்கே போராட்டம் நடத்தி வருகிறார்கள். தங்கள் குடும்பத் தலைவர்களை, சகோதரர்களை, பிள்ளைகளைக் காணாமல் அவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் வேளையில், நடுக்கடலில் மிதக்கும் பிணங்கள் என்று வெளிவந்த செய்திகள் மனதில் கலக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த செய்தியைப் பார்த்துக் கண்கலங்கிக் கதறும் தாய்மார்களின் போராட்டம் மனதை வேதனைத் தீயில் ஆழ்த்துவதாக உள்ளன.
ஆனால், ஒக்கி புயல் பாதித்தப் பகுதிகளை இதுவரை நேரில் சென்று பார்வையிடாமல், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும் ஆறுதல் சொல்லாமல், காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியையும் நேரடியாகக் கண்காணிக்காமல், ‘எம்.ஜி.ஆர் விழா கொண்டாட்டத்திலும்’, ‘ஆர்.கே.நகர் வாக்கு சேகரிப்பிலும்’, ஈடுபட்டிருக்கும் கல்நெஞ்சம் கொண்ட அலட்சிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த மாநிலத்தை ஆளும் தகுதியையும், தார்மீக உரிமையையும் அறவே இழந்துவிட்டார்.
பேரிடர் ஏற்பட்ட பிறகும் மக்கள் படும் அடுக்கடுக்கான துன்பங்களை ரசிப்பது போல், இப்படி கொண்டாட்டங்களில் ஈடுபடும் எடப்பாடி பழனிசாமிக்கு மனித நேயம் அறவே அற்றுப் போய்விட்டது. அறிஞர் அண்ணா குறிப்பிட்டதைப் போல, "உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் வெறும் பள்ளம்தான் இருக்கிறது". இப்போது மட்டுமல்ல, அனிதா மரணம், கதிராமங்கலம் போலீஸ் தடியடி, நெடுவாசல் போராட்டம் என்று மக்கள் பாதிக்கப்படும் போதெல்லாம், ஒருமுறை கூட முதலமைச்சர் மக்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை. துயரத்தில் இருக்கும் மக்களை வேடிக்கை பார்க்கும் ஒரு வினோதமான முதலமைச்சர் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில், அதுவும் சட்டவிரோதமாக அமர்ந்திருப்பது அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு ஏற்பட்டுள்ள சாபக்கேடாகவே அமர்ந்துள்ளது.
மக்களைப் பார்க்கும் எண்ணமே வறண்டு போன முதலமைச்சர், இனியும் கோட்டையில் இருந்து என்ன லாபம் என்ற கோபக்கனல் கன்னியாகுமரி மாவட்ட மீனவ மக்களுக்கு, குறிப்பாக தாய்மார்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தக் கோபத்தின் எரிமலை உச்சியில் உட்கார்ந்திருக்கும் எடப்பாடி பழனிசாமியோ, அவரை ஆட்சியில் தொடர அனுமதித்து அழகு பார்த்து வரும் மத்திய பா.ஜ.க. அரசோ, காணாமல் போன கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களை மீட்பதில் வரலாறு காணாத அலட்சியத்தையும், அக்கறையற்ற போக்கையும் கடைப்பிடித்து வருகின்றன.
"கடைசி மீனவர் மீட்கப்படும் வரை கடற்படை மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்படும்", என்று கூறும் மத்திய பா.ஜ.க. அரசு, மற்ற மாநிலங்களில் கரை சேர்ந்த மீனவர்களையும், காணாமல் போன மீனவர்களையும் மீட்டுக் கொண்டு வந்து மாவட்டத்தில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? தங்களின் ரத்த சொந்தங்களை இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஜனநாயகரீதியில் போராடினால், ரயில்வே போலீஸும், ‘குதிரை பேர’ அரசும் அவர்கள் மீது வழக்குப் போடுவது ஏன்? மீட்புப்பணியில் காட்டாத அக்கறையை மீனவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்கான அடக்குமுறை அராஜகத்தில் ‘குதிரை பேர’ அதிமுக அரசு ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் காணாமல் போன மீனவர்களை மீட்கவும், ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாகச் சீரமைக்கவும், இறந்துபோன மீனவ குடும்பங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, கூடுதல் நிதியுதவி ஆகியவற்றை வழங்கக் கோரியும், மீட்புப்பணிகளில் மத்திய - மாநில அரசுகளின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், திராவிட முன்னேற்றக் கழக மீனவரணி சார்பில் நாளை (12.12.2017) சென்னை மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் முன்பு மாபெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட்டம் என் தலைமையில் நடைபெறும் என்றும், இது மீனவர்களுக்கான பிரச்னை என்று கருதாமல் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்பாகக் கருதி, அனைத்துத் தரப்பு மக்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்தில் என்னுடன் பங்கேற்று, மத்திய - மாநில அரசுகளுக்கு தங்களுடைய கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.