Published : 05 Oct 2023 04:52 AM
Last Updated : 05 Oct 2023 04:52 AM

அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவால் நடைபயணம் தள்ளிவைப்பு: சென்னை கூட்டத்தில் இன்று பங்கேற்கிறார்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அக்.6-ம் தேதி நடைபெற இருந்த நடைபயணம் அக்.16-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்று நடக்க இருக்கும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் அண்ணாமலை திட்டமிட்டபடி பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில் அண்ணாமலை அக்.3-ம் தேதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு, அக்.4-ம் தேதி மேட்டுப்பாளையத்தில் தனது 3-ம் கட்ட நடைபயணத்தை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

இதற்கிடையில் நடைபயணத்தை அக்.6-ம் தேதி மாற்றியமைத்துவிட்டு, அண்ணாமலை உடனடியாக டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கு ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ், நிர்மலா சீதாராமன் ஆகியோரை அண்ணாமலை சந்தித்து பேசினார். இதையடுத்து, நேற்று முன்தினம், இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் அண்ணாமலை சென்னை திரும்பினார்.

இந்நிலையில், அண்ணாமலைக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இருமல், உடல் வலி, தொண்டை வலி, சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளுடன் அவர் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை நுரையீரல் துறை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில் அவருக்கு சுவாசக் குழாயில் நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து, வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர். இதனால், அண்ணாமலையால், 6-ம் தேதி தொடங்க இருந்த நடைபயணத்தில் பங்கேற்க முடியாது என்றும் எனவே, நடைபயணத்தை 16-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளதாகவும் பாஜக அறிவித்துள்ளது.

அதேசமயம், பாஜக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் அண்ணாமலை தலைமையில் இன்று காலை 10 மணிக்கு அமைந்தகரையில் திட்டமிட்டபடி நடைபெறும்.இதில் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர் என்று தமிழக பாஜக தெரிவித்துள்ளது. கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய தகவலை அண்ணாமலை வெளியிடுவார் என எதிர்பார்ப்பதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x