வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் மகன்கள் உட்பட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு; திமுக முன்னாள் அமைச்சர் மகன்கள் உட்பட 4 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
Updated on
1 min read

திருச்சி: திருச்சி மாவட்டம் மருங்காபுரி அருகேயுள்ள வேலக்குறிச்சியை சேர்ந்தவர் பி.எம்.செங்குட்டுவன். இவர் 1996 சட்டப்பேரவைத் தேர்தலில்மருங்காபுரி தொகுதியில் வென்று, திமுக அமைச்சரவையில் இடம்பெற்றார்.

இவர் அமைச்சராக இருந்தகாலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.81.42 லட்சம்மதிப்பில் சொத்து சேர்த்ததாக 2003-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், செங்குட்டுவன், அவரது மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல், மகள்மீனாட்சி, அவரது கணவர் ராஜலிங்கம், சகோதரர் மகள் வள்ளி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.இந்த வழக்கு திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு தனி நீதிமன்றத்தில் நடைபெற்றது.

கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி கே.பாபு நேற்று தீர்ப்பளித்தார். இதில், பன்னீர்செல்வம், சக்திவேல், மீனாட்சி, வள்ளி ஆகிய 4 பேர் ஊழலுக்கு உடந்தையாக இருந்ததால், தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

முன்னாள் அமைச்சர் பி.எம்.செங்குட்டுவன், அவரது மருமகன் ராஜலிங்கம் ஆகியோர் உடல் நலக்குறைவால் வழக்கும்நடைபெறும்போதே மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட தண்டனை 3 ஆண்டுகளுக்கு மிகாமல் இருப்பதால், 4 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in