பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
சென்னை: பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு சென்னை, கோவை, மங்களூரு, கொச்சி உள்ளிட்ட 9 இடங்களில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை, காலிமனை விற்பனையில் வந்த வருமானத்தை முறையாக கணக்கு காட்டாமல், வரி ஏய்ப்பு செய்துமத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக இந்நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர். அந்த வகையில், சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள கிளை அலுவலகத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள், பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
மேலும், நாடு முழுவதும் இந்நிறுவனத்துக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக சோதனை நடைபெற்று வருவதால், சோதனை முழுமையாக முடிந்த பிறகே வரி ஏய்ப்பு விவரங்களை வெளியிட முடியும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
