

சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இதில் த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன், பிரியா ஆனந்த்,மிஷ்கின், கவுதம் வாசுதேவ்மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன்ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது.வரும் 19-ம் தேதி படம் வெளி யாக உள்ளது.
விஜய்யின் பிறந்த நாளான கடந்த ஜூன் 22-ம் தேதி லியோ படத்தின் முதல் சிங்கிளான ‘நான்ரெடி’ பாடலை படக் குழு வெளியிட்டது. இந்தப் பாடலை அனிருத் இசையில் விஜய், அனிருத், அசல்கோலார் பாடியுள்ளனர். இந்தப்பாடல் வரவேற்பை பெற்றது. ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
இந்நிலையில், இதன் இசை வெளியீட்டு விழாவை, கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்றன. ஆனால், கடைசி நேரத்தில் விழா ரத்து செய்யப்பட்டது. ‘பாதுகாப்பு காரணங்கள் மற்றும் விழாவுக்கான பாஸ் கோரிக்கைகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டை நடத்தவில்லை’ என தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தெரிவித்திருந்தது.
இதையடுத்து லியோ படத்தின்டி ரெய்லர் இன்று (அக்.5)வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. வழக்கமாக விஜய் பட ட்ரெய்லர் வெளியானால், ரசிகர்களை மகிழ்விப்பதற்காக திரையரங்குகள் அதை ஸ்பெஷல் ஸ்கிரீனிங் செய்வது வழக்கம். அந்த வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் உள்ள கார் பார்க்கிங்கில் பிரம்மாண்ட ஸ்கிரீன் ஒன்றை ஏற்பாடு செய்து அதில் திரையிட திட்டமிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, தியேட்டர் நிர்வாகம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களைச் சுட்டிக்காட்டி, அனுமதி தொடர்பாக காவல் ஆணையரை அணுகுமாறு போலீஸார் அறிவுறுத்தினர்.
ஏற்கெனவே லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியீட்டு கொண்டாட்டத்துக்கும் சிக்கல் ஏற்பட்டிருப்பது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.