

மதுரை: மதுரை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணிபுரிகிறார்கள்.
மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்கும் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 100 வார்டுகளில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடக்கிறது. இத்திட்டத்தில் லோயர் கேம்ப் பகுதியில் இருந்து வரும் குடிநீரை, விநியோகம் செய்ய மாநகராட்சி பகுதியில் 47 மேல்நிலை குடிநீர் தொட்டிகள் கட்டப்படுகின்றன. இதில் பெரும்பாலான குடிநீர் தொட்டிகள் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில், சில இடங்களில் இன்னும் பணிகள் நடக்கின்றன.
பெரியார் பேருந்து நிலையம் அருகே மேலவாசல் பகுதியில் மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டுமானப் பணி நடக்கிறது. இதில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள், கவச உடைகள் இன்றி பணிபுரிகிறார்கள். சிறு அசம்பாவிதம் ஏற்பட்டாலும் உயிருக்கு ஆபத்தானதாகும். எனவே, மாநகராட்சி அதிகாரிகள், தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள், கவச ஆடைகள் அணிந்து பணிபுரிகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.