Published : 10 Dec 2017 01:46 PM
Last Updated : 10 Dec 2017 01:46 PM

கோவை வெள்ளலூரில் கைக்கோளப் படையினர் அமைத்த குளம்: காசி அப்பச்சி கோயில் கல்வெட்டு மூலம் தகவல்

கோவை வெள்ளலூரில் உள்ள காசி அப்பச்சி கோயில் கல்வெட்டில், சோழர் காலத்து கைக்கோளப் படையினரால் குளம் அமைக்கப்பட்டுள்ள விவரம் பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வெட்டு ஆராய்ச்சியாளர் து.சுந்தரம் கூறியதாவது: வெள்ளலூர் காசி அப்பச்சி கோயிலில் தனி கல்லாலான கல்வெட்டு இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வரலாற்று ஆர்வலர்கள் பாஸ்கரன், மீனாட்சிசுந்தரம் ஆகியோருடன் ஆய்வு செய்தேன் .

வெள்ளலூரின் எல்லையில், இடையர்பாளையம் சாலையில் அமைந்துள்ள சிறு கோயில்தான் காசி அப்பச்சி கோயில். இங்கு நடுகல் சிற்பம் மூலவராக உள்ளது.

புலிகுத்திக்கல்

கோவை பகுதியில் கால்நடைகளின் பட்டியை வீரர்கள் காவல் காப்பார்கள். இவர்களில், கால் நடைகளைத் தாக்கவரும் புலியை சண்டையிட்டுக் கொன்று, தானும் உயிரிழக்கும் வீரனுக்கு நினைவுக் கல் அமைக்கப்படும். இதுபோன்ற நினைவுக் கற்கள் நிறைய அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகை நடுகல்லை இங்கு கோயிலாக்கியுள்ளனர்.

காசி அப்பச்சி என்னும் அந்த வீரனுக்கு வழிபாடு நடக்கிறது. புலிகுத்திக்கல் சிற்பத்தில், வீரன் தன் வாளை புலியின் வாய்ப்பகுதியில் பாய்ச்சுகிறான். புலி தன் பின்னங்கால்களில் நின்றுகொண்டு, முன்னங்கால்களால் வீரனைத் தாக்கும் நிலையில் உள்ளது. இங்குள்ள பிள்ளையாரை, வாதப் பிள்ளையார் என்று அழைக்கின்றனர். மக்கள் தம்முடைய வாத நோய் நீங்கவேண்டி, இந்த பிள்ளையாரையும், அருகில் கல்வெட்டு எழுத்துகளுடன் உள்ள தனிக் கல்லையும் சேர்த்து வணங்குகின்றனர்.

கல்வெட்டு

சுமார் 3 அடி உயரம் கொண்ட கல். நீள் சதுர வடிவம் கொண்டது. உச்சிப் பகுதியில் மட்டும் வளைவாக வடிக்கப்பட்டுள்ளது. எழுத்துகளின் பதினோரு வரிகள் காணப்படுகின்றன. கோடுகள் செதுக்கப்பட்டு, கோடுகளுக்கிடையில் எழுத்துகள் எழுதப்பட்டுள்ளன.

கல்லின் தரைப்பகுதியில், தரைக்கு கீழே மேலும் சில வரிகள் இருக்கலாம். அந்தப் பகுதியில்தான் கல்வெட்டு செய்தி முடிவடைகிறது என்று கருத வேண்டியுள்ளது.

ஏனெனில், வழக்கமாக கல்வெட்டுகளின் முடிவில் காணப்படும் “இது பந்மாகேச்வர ரக்ஷை” என்னும் இறுதித் தொடர், இந்தக் கல்வெட்டில், கல்லின் பக்கவாட்டுப் பகுதியில் பொறிக்கப்பட்டுள்ளன. கல்லின் பருமன் சிறியது. எனவே, மூன்று சிறு வரிகளில் “பந்மாகே (ச்வ)ர இரக்க்ஷை” என்னும் தொடர் எழுதப்பட்டுள்ளது.

கல்வெட்டின் காலம்

இந்தக் கல்வெட்டு கி.பி. 12-14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டுள்ளது. வழக்கமாக கல்வெட்டுகள் ‘ஸ்வஸ்திஸ்ரீ’’ எனும் மங்கலத் தொடருடன் தொடங்குவது வழக்கம். அவ்வாறே இந்தக் கல்வெட்டும் தொடங்குகிறது. ஆனால், கல்வெட்டின் காலத்தைக் கணிக்க உதவும் வகையில், அரசனின் பெயரோ, ஆண்டுக்குறிப்போ காணப்படவில்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ‘வெள்ளலூர் ஆளுடையார்’ என்பது வெள்ளலூரில் கோயில் கொண்டிருக்கும் இறைவனைக் குறிக்கும் பொதுத்தொடர். ‘ஆளுடையார் தென்னூராண்டார்’ என்னும் தொடர், ஊருடன் இணைத்து வழங்கும் இறைவனின் சிறப்புப் பெயரைக் குறிக்கும். அந்த வகையில், தென்னூரின் இறைவன் என்பது உணரப்படும்.

எனவே, வெள்ளலூருக்குத் தென்னூர் என்று மற்றொரு பெயரும் உண்டு என்பது புலனாகிறது. இதற்குச் சான்றாக பல கல்வெட்டுகள் உள்ளன. மேலும், கல்வெட்டில் ‘அன்னதான சிவபுரியில்’ என்னும் தொடர் காணப்படுகிறது. அன்னதான சிவபுரி என்பது வெள்ளலூரின் மற்றொரு பெயராகும்.

மேலும், ‘பொற்கோயிற் கைக்கோளர்’ என்னும் தொடர், கைக்கோள வீரர்களைக் கொண்ட படையினரைக் குறிக்கும். கி.பி.10-ம் நூற்றாண்டு சோழர் காலக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பல்வகைப் படையினரில் கைக்கோளர் படையினரும் ஒருவர். ‘பொற்கோயில்’ என்ற சிறப்பு அடையாளத்தை அல்லது பட்டத்தைச் சிலருக்கு அரசர் வழங்கியிருக்க வேண்டும். கொங்குச் சோழர் ஆட்சியில், கொங்குப் பகுதியில் கி.பி. 12-14-ம் நூற்றாண்டுகளில் கைக்கோளப் படையினர் இருந்துள்ளனர்.

பேரூர் நாட்டு பகுதியில் சிறப்புப் பெற்ற வணிக நகரமாக வெள்ளலூர் இருந்துள்ளது. ரோமானிய வணிகர்கள் வெள்ளலூர் வழியாக வணிகம் செய்துள்ளனர்.

கல்வெட்டில் ‘தென்னுராண்டார் திருக்குளம் பெரியநாச்சியார் வாரம்’ என வரும் தொடர், கோயிலைச் சேர்ந்த திருக்குளத்தால் பெறப்படும் வருவாய், நாச்சியார் என்னும் அம்மனுக்கு வேண்டிய வழிபாட்டுச் செலவினங்களுக்குப் பயன்பட்டிருக்கக் கூடும்.

வெள்ளலூரில் அன்னதான சிவபுரியில் இருக்கும் பொற்கோயில் கைக்கோளர் படையினர், வெள்ளலூர் சிவன் கோயிலில் எழுந்தருளியிருக்கும் இறைவன் தென்னூர் ஆண்டாருக்குத் திருக்குளம் அமைத்துக் கொடுத்துள்ளனர் என்பதும், குளத்தின் வருவாய் அம்மன் வழிபாட்டுச் செலவினங்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதுமே இந்த கல்வெட்டில் குறிப்பிட்டுள்ள தகவல்கள். மேலும், கோயில் நிர்வாகி பந்மாகேசுவரர், இந்த விஷயத்தை கண்காணித்துப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர் ஆவார் என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

மொத்தத்தில், பழங்காலத்தில் பன்முகச் சிறப்புகளைப் பெற்ற நகரமாக வெள்ளலூர் இருந்துள்ளது புலப்படுகிறது. கோவை என்னும் கோவன்புத்தூர் உருவாவதற்கு முன்னரே, கிரேக்க வணிகர்கள் வந்துபோன நகரமாக இருந்துள்ளது. கி.பி. முதல் நூற்றாண்டிலேயே வெளிநாட்டு வணிகத் தொடர்பு உடையதாய் விளங்கிற்று என்றும், இங்கு பிராமணச் சதுர்வேதி மங்கலம் ஒன்று இருந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x