Published : 04 Oct 2023 05:29 AM
Last Updated : 04 Oct 2023 05:29 AM
விழுப்புரம்: அமைச்சர் பொன்முடிக்கு எதிரானசெம்மண் குவாரி வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மனு விழுப்புரம் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டது.
2006-2011-ல் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, கனிமவளத் துறையையும் கூடுதலாக கவனித்து வந்தார்.அப்போது, விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்குத் தொடரப்பட்டது.
இதில், அமைச்சர் பொன்முடி, அவரது மகனான கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கவுதம சிகாமணி, ஜெயச்சந்திரன், கோபிநாத், கோதகுமார், சதானந்தன், லோகநாதன், ராஜமகேந்திரன் ஆகிய 8 பேர் மீது விழுப்புரம் குற்றப் பிரிவு போலீஸார் 2012-ல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக பொன்முடி உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றஉத்தரவுபடி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய லோகநாதன் உடல்நலக்குறைவால் ஏற்கெனவே உயிரிழந்து விட்டார்.
இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 9 பேர் பிறழ் சாட்சியம் அளித்தனர். இதைத் தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில் விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “அமைச்சர் பொன்முடிமீதான வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சியாக மாறி, சாட்சியம் அளித்து வருகின்றனர். அரசு அதிகாரத்தில் இருப்பவருக்கு எதிராக அரசு அதிகாரிகள் எப்படி சாட்சியம் அளிக்க முடியும்? நேர்மையான முறையில் அவர்கள் சாட்சியம் அளிக்க முடியாது. எனவே அரசு தரப்புக்கு உதவியாக எங்களையும் இவ்வழக்கில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணைக்காக, விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த 25-ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் ஆஜரானார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவில் முகாந்திரம் இருப்பதால், அந்தமனு ஏற்கப்பட்டதாக நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஆட்சேபனை இருந்தால் அரசு தரப்பும், பொன்முடி தரப்பும் தெரிவிக்கலாம் என்றுஉத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 9-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்து உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தரப்பில், முன்னாள் அரசுவழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT