Published : 04 Oct 2023 06:00 AM
Last Updated : 04 Oct 2023 06:00 AM
சென்னை: தொடர் விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களிலிருந்து ஒரே நேரத்தில் சென்னை திரும்பிய மக்களால் சென்னை புறநகர் மட்டும் அல்லாமல் அதற்கு முன்பு உள்ள செங்கல்பட்டு, விழுப்புரம் பகுதிகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
வார விடுமுறை, காந்தி ஜெயந்தி உட்பட கடந்த 28-ம் தேதிமுதல் நேற்று முன்தினம் வரை 5 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறையும் விடப்பட்டது. இதையடுத்து சென்னையில் பணிபுரியும் வெளி மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊருக்கு குடும்பத்துடன் சென்றனர். மேலும், பலர் சுற்றுலாவுக்காகவும், உறவினர்கள், நண்பர்களை காணவும் சென்னையிலிருந்து வெளியூர் நோக்கிக் கிளம்பினர்.
இந்நிலையில், விடுமுறை முடிந்து தென் மாவட்டத்திலிருந்து சென்னை நோக்கி ஒரே நேரத்தில் மக்கள் நேற்றும், நேற்று முன்தினமும் படையெடுத்தனர். இதனால், விழுப்புரத்திலிருந்தே நெரிசல் ஏற்பட ஆரம்பித்தது. குறிப்பாக செங்கல்பட்டு, பெருங்களத்தூர் வர வர நெரிசல் மேலும் அதிகரித்தது. வாகனங்கள் உரிய வேகத்தில் செல்ல முடியாமல் சாலையிலேயே ஆமை வேகத்தில் நகரும் சூழல் ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் சென்னைக்குள் நுழைந்ததால் நேற்று காலை11 மணி வரையிலும் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையின் நுழைவு வாயிலான பரனூர் சுங்கச்சாவடியைக் கடப்பதற்கே பல மணி நேரம் தேவைப்பட்டது. இதனால் திருச்சி –சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கார், பேருந்து, ஆம்னி பேருந்து என ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணி வகுத்து நின்றன.
ஒழுங்குபடுத்திய போலீஸார்: அதேபோல, ஜிஎஸ்டி சாலை, செங்கல்பட்டு, வண்டலூர், கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், தாம்பரத்திலும் அதிகளவு நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸார் அதிகளவு குவிக்கப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தாலும் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னை நோக்கி வந்ததால் இதுபோன்ற வாகன நெரிசல் ஏற்பட்டதாக போக்குவரத்து போலீஸார் தெரிவித்தனர்.
இதேபோன்று கோயம்பேடு பேருந்து நிலையம், நூறடி சாலை சந்திப்பு, விருகம்பாக்கம், நெற்குன்றம் போன்ற பகுதிகளிலும் வாகன நெரிசலைக் காண முடிந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT