Published : 04 Oct 2023 06:07 AM
Last Updated : 04 Oct 2023 06:07 AM
மாமல்லபுரம்: திருக்கழுகுன்றத்தை அடுத்த பெரும்பேடு கிராமத்தில் பாலாறு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, காந்தி ஜெயந்தியையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை அப்பகுதி பொதுமக்கள் புறக்கணிப்பு செய்தனர். திட்டப்பணிகளை செய்யவிடாமல் தடுப்பதாக திமுக நிர்வாகி மீது அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரும்பேடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில், பெரும்பேடு ஊராட்சி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி கிராம சபை கூட்டத்தை பொதுமக்கள் புறக்கணித்தனர்.
இதனால், கிராமசபை கூட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், நூறு நாள் வேலை வாய்ப்பு வழங்கப்படாது என ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன் மற்றும் காவல் ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்டோர் அப்பகுதி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதில், பெரும்பேடு ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வரும் நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாவட்ட கவுன்சிலர் கலாவதி குடிநீர் பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கிடு செய்த நிலையில், பணிகள் ஏன் தொடங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினர்.
திமுகவின் ஒன்றிய தெற்கு செயலாளர் சரவணன் பணிகளுக்கு இடையூறு செய்வதாக குற்றச்சாட்டு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஆறு மாத காலத்தில் ஊராட்சி பகுதி முழுவதும் பாலாற்று குடிநீர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. எனினும், பொதுமக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, திருக்கழுகுன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன் கூறியதாவது: பெரும்பேடு ஊராட்சிக்கு பாலாற்றில் ஆழ்துறை கிணறு அமைத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சில பகுதிகளில் குடிநீரில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், பெரும்பேடு கிராமத்துக்கு முறையாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மாவட்ட கவுன்சிலர் வழங்கிய ரூ.10 லட்சம் நிதியில் பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடியாது. அதனால், அந்த நிதியை பயன்படுத்தவில்லை.
மேலும், புதிதாக ரூ.43 லட்சம் மதிப்பில் திட்டமதிப்பீடு தயாரித்து ஊரக வளர்ச்சித் துறையின் ஒப்புதலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு, செய்யூர் எம்எல்ஏ நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் உறுதியளித்துள்ளார். அதனால், விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT