425 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அண்ணா பல்கலை. எப்படி செயல்படுகிறது? - பதிவாளர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

425 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் அண்ணா பல்கலை. எப்படி செயல்படுகிறது? - பதிவாளர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: காலியாக 425 பேராசிரியர் பணியிடங்களை வைத்துக்கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது? என்பது குறித்து அப்பல்கலைக்கழகப் பதிவாளர் நாளை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் கடந்த 2010-11-ம் ஆண்டுகளில் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பலர் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் தங்களை பணி நிரந்தரம் செய்யாமல்புதிதாக தற்காலிக ஆசிரியர்களைநியமிக்கக் கூடாது என்றும், இதுதொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டன.

இந்த வழக்குகளை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது என்றும், காலியாகஉள்ள பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டுமென்றும் கூறி, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து தற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள் தாக்கல்செய்த மேல்முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது.

அப்போது நிரந்தரமாக பேராசிரியர்களை நியமிக்கும் விவகாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைப்பாடு என்ன? 12 ஆண்டுகளாக தற்காலிக ஆசிரியர்களாக பணியில் உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்வதில் என்ன சிக்கல் உள்ளது? நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க ஏன் நேரடித் தேர்வு நடத்தக் கூடாது? என்று கேள்விகள் எழுப்பியிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இதே அமர்வில் நேற்று மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போதுபல்கலைக்கழகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘‘அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழும (ஏஐசிடிஇ) விதிகளின்படி உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர், பேராசிரியர் என அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் 1,745 ஆசிரியர்கள் பணியில்இருக்க வேண்டும்.

ஆனால் 981பணியிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிலும் 556 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். 425 பணியிடங்கள் நீண்டகாலமாக காலியாக உள்ளது. வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இந்த பணியிடங்களை நிரப்ப முடியவில்லை’’ என தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், கடந்த முறை இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கவில்லை என்றும், 2020-ம்ஆண்டு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டுமென தனி நீதிபதிஉத்தரவு பிறப்பித்து 3 ஆண்டுகளுக்குப் பிறகே கடந்த செப்டம்பர் மாதம்சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டுள்ளதாகவும், அந்த உத்தரவை 3 ஆண்டுகளாக அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அதிருப்தி தெரிவித்தனர்.

பின்னர் இத்தனை பணியிடங்களை காலியாக வைத்துக்கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் எப்படி செயல்படுகிறது? என்பது குறித்து அப்பல்கலைக்கழக பதிவாளர் பதில் அளிக்க வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு (அக்.5) தள்ளி வைத்துள்ளனர். தவறும்பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் நேரில் ஆஜராக நேரிடும் என்றும் எச்சரித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in