Published : 04 Oct 2023 04:02 AM
Last Updated : 04 Oct 2023 04:02 AM

கர்ப்பிணிகள் மரணம்: மாநகராட்சி அதிகாரியை நீக்க கோரி மதுரை அரசு மருத்துவர்கள் போராட்டம்

மதுரை அரசு மருத்துவமனையில் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரியும் மருத்துவர், பயிற்சி மருத்துவர்கள். படம்: நா. தங்கரத்தினம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பான மூவர் குழு விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

மதுரை மாநகராட்சியில் உள்ள 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளின் உடல்நிலை மோசமடைந்தால் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்கின்றனர். சமீபகாலமாக, அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிகள் மரணம் அதிக அளவு நிகழ்ந்ததாக தகவல் வெளியானதால் சர்ச்சையானது.

இது குறித்த ஆய்வில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கும், அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து ஆட்சியர் சங்கீதா சிறப்பு தணிக்கை செய்தார். இதில், அடுத்தடுத்து கர்ப்பிணிகள் 3 பேர் உயிரிழந்ததும், அவர்களுக்கு வழங்கிய சிகிச்சை விவரக் குறிப்புகளில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் திருத்தம் செய்திருந்ததும் தெரிய வந்தது.

அதனால், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ‘டீன்’ ரெத்தின வேலுவை ஆட்சியர் கேட்டுக்கொண்டார். ஆனால், டீனுக்கு அரசு மருத்துவர்கள் அழுத்தம் கொடுத்ததால் இந்த விவகாரத்தைக் கிடப்பில் போட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தை ஆட்சியர் சங்கீதா மாநில சுகாதாரத் துறையின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

அதன் பேரில் நேற்று முன்தினம் 3 பேர் கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் குழுவினர் மதுரை வந்து மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத், ‘டீன்’ ரெத்தின வேலு மற்றும் இரு தரப்பு மருத்துவர்கள், செவிலியர்களிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஆட்சியர் சுகாதாரத்துறைக்கு அனுப்பிய சிறப்பு தணிக்கை விவரம், மாநகராட்சி நகர்நல அலுவலருக்கு, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது குற்றம்சாட்டி எழுதிய கடிதம் ஆகியவை பொது வெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. துறை ரீதியாக நடக்கும் விசாரணை, கடிதப் போக்குவரத்து எப்படி பொது வெளியில் வெளியானது என அதிகாரிகள் தரப்பில் விசாரணையும் நடக்கிறது.

சுகாதாரத் துறை மூவர் குழுவின் விசாரணை அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அறிக்கை வெளியான பிறகே யார் மீது தவறு என்பது தெரியவரும். இந்த விவகாரத்தை சுமூகமாக முடிக்கப் பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

அறுவை சிகிச்சை நிறுத்தம்: இந்நிலையில் நேற்று முதல் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தை தொடங்கி உள்ளனர். மேலும், அவசரமில்லாத அறுவை சிகிச்சையை நிறுத்தி உள்ளனர். மாநகராட்சி நகர்நல அலுவலர் வினோத்தை தற்காலிக பணி நீக்கம் செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x