

வேலூர்: தொடர் விடுமுறை காரணமாக வேலூர் சரகத்தில் ஆம்னி பேருந்துகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 1,022 வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய விதிகளை பின்பற்றாத வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.8.83 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தொடர் விடுமுறை நாளில் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தவிர்க்க ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, வேலூர் சரக துணை போக்குவரத்து ஆணையர் நெல்லையப்பர் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவ லர்கள் ராமலிங்கம் (ராணிப் பேட்டை), வெங்கடேசன் (வேலூர் பொறுப்பு), செங்குட்டுவேல் (அரக்கோணம்), ராம கிருஷ்ணன் (வாணியம்பாடி),
அமர்நாத் (ஆம்பூர்), காளியப்பன் (திருப் பத்தூர்), ஆனந்த் (கிருஷ்ணகிரி), துரைசாமி (ஓசூர்), பறக்கும் படை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் அன்பு செழியன் (கிருஷ்ணகிரி), பிரதீபா (வேலூர்) மற்றும் மோட்டார் வாகன ஆய் வாளர்கள் சிவக்குமார், மாணிக்கம், வெங்கட்ராகவன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் வாலாஜா, பள்ளி கொண்டா, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, ஓசூர் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி நேற்று வரை திடீர் ஆய்வு மேற் கொண்டனர்.
இதில், ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட மொத்தம் 1,022 வாகனங்களில் ஆய்வு மேற் கொள்ளப்பட்டன. பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பு, அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பொருத்தி யிருந்தது, அதிக ஒளி வீசும் முகப்பு விளக்கு பொருத்தியது, ஓட்டுநர் ‘சீட்' பெல்ட் அணியாதது, முதலுதவி பெட்டி இல்லாதது, பிரதிபலிப்பான் ஸ்டிக்கர் ஒட்டாதது, உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள், வரி செலுத்தாதது என மொத்தம் ரூ.5 லட்சத்து 48 ஆயிரம் அபராத மாக வசூலிக்கப்பட்டது.
மேலும், ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் அபராதம் நிர்ணயிக் கப்பட்டு வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாலை வரி செலுத்தாமல் இயக்கப்பட்ட வாகன உரிமையாளர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்து 410 வசூலிக்கப்பட்டது. மேலும், உரிய ஆவணங்கள் இல்லாத 3 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. மொத்தம் ரூ.8.83 லட்சம் அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.