தமிழகத்தில் ஓராண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது: அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
சேலம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளால், தமிழகத்தில் அடுத்த ஓராண்டுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: செம்பரம்பாக்கம் ஏரி தற்போது நிரம்பியுள்ளது. பூண்டி ஏரியில் இருந்து கடலுக்கு நீர் சென்று கொண்டிருக்கிறது. எனவே, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வழியில்லை. அதேபோல, கோவையில் 168 எம்எல்டி குடிநீரைப் பெறும் வகையில் பில்லூர் குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.
மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, கன்னியாகுமரி மாவட்டங்களைப் பொறுத்தவரை, ஏற்கெனவே ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள் மற்றும் பழுதுகளை அலுவலர்கள் உடனுக்குடன் சீரமைத்து வருகின்றனர்.
தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை. தென்மேற்குப் பருவமழைக் காலத்தில், காவிரி நீர்பிடிப்புப் பகுதியில் மட்டுமே மழை குறைவாக இருந்தது. பிற இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது.
காவிரி குடிநீர் பகுதிகளுக்கான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மேட்டூர் அணையில் தேவையான அளவு குடிநீர் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணியில் மழை குறைந்த காரணத்தால் ஒரு நாள் மட்டும் வறண்ட நிலை ஏற்பட்டது. ஆனாலும், மறுநாளே மழை பெய்ததால், தாமிரபரணி மூலம்போதிய அளவு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
அக்டோபர் 15-ம் தேதி முதல் வட கிழக்குப் பருவமழை பெய்யும்என்று வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர், டிசம்பரில் முழுமையாக மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர். மழை பெய்யாமல் இருந்தாலும், இன்னும் ஓராண்டு காலத்துக்கு தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு எந்த இடத்திலும் இருக்காது.
தமிழக முதல்வர், நீர்வளத் துறை அமைச்சர் ஆகியோர், காவிரிநீரைப் பெறுவது தொடர்பாக முழு முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், முதல்வர் தலைமையில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு, அலுவலர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, குடிநீர் தட்டுப்பாடு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
