

திருப்பூர்: செம்மிபாளையம் ஊராட்சி சாமிக் கவுண்டன்புதூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கடும் இடநெருக்கடி ஏற்பட்டதால், கால்கடுக்க நின்ற பொதுமக்கள், அதிகாரிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.
மகாத்மா காந்தியின் 155-வது பிறந்த நாளையொட்டி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே செம்மிபாளையத்தில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. செம்மிபாளையம் ஊராட்சி சாமிக்கவுண்டன்புதூர் பழைய இ.பி.ஆபிஸ் நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் பங்கேற்றார்.
செம்மிபாளையம் ஊராட்சி தலைவர் ஷீலா புண்ணிய மூர்த்தி தலைமை வகித்தார். அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட பல்வேறு துறை அலுவலர்கள் பங்கேற்றதால், போதிய இட வசதி இல்லாமல் அதிகாரிகள், பொதுமக்கள் பலரும் நிகழ்வு முடியும் வரை கால்கடுக்க நிற்கும் சூழல் எழுந்தது. இதனால் பலரும் அவதிக்குள்ளாகினர்.
ஆண்டுக்கு 6 கிராமசபைக் கூட்டங்களை அரசு நடத்தி வருகிறது. இதில் போதிய விரிவான ஏற்பாடுகள் செய்துதர வேண்டுமென பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதிகாரிகள் பேசும்போது, "வீடு மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பதன் மூலமாக டெங்கு உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கலாம். வீடுகளில் தண்ணீர் பிடித்துவைத்தால், அதனை துணி கொண்டு மூடி வைத்து அதன் பின்னர் மூடி போட்டு வைத்தால் கொசுப் புழுக்கள் குடிநீரில் உண்டாகாது. சுற்றுவட்டாரத்தில் இடைநிற்றல் இல்லாத வகையில் குழந்தைகள் அனைவரும் படிக்க வேண்டும்" என்றனர்.
கூட்டத்தில் பெண் குழந்தைகள் திருமணத்தை தடுக்கும் 1098 உள்ளிட்டவை தொடர்பாகவும், அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டது.
ஊராட்சி தலைவர் கண்ணீர்: அவிநாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி சார்பில் நடந்த கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் மகேஸ்வரி தலைமை வகித்தார். கூட்டத்தில், பிரபு என்பவர் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிக்கான பணம் செலுத்தி ரசீது பெற்றுச் சென்றதாகவும், பிறகு வேண்டுமென்ற பணம் செலுத்தாமல் ரசீது பெற்றுச் சென்றுள்ளார் என ஊராட்சி நிர்வாகத்தினர் பதாகையில் ஒட்டியிருந்தது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய பதில் அளித்துவிட்டு கிராம சபையை தொடங்க வேண்டுமென சம்பந்தப்பட்ட நபர் தெரிவித்தார். இதனால், பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. பொய்யாக அவதூறு பரப்பியதற்காக பதவி விலக வேண்டும், பணம் பெற்று ரசீது கொடுத்த ஊராட்சி செயலாளரை பணி நீக்கம் செய்ய வேண்டுமென பிரபு தரப்பினர் கூறினர்.
இதில் மன வேதனையடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் மகேஷ்வரி, கிராம சபைக் கூட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார். சம்பவ இடத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
கருவலூரில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், எலச்சிபாளையம் பகுதியில் மின்விளக்குகள், மேல்நிலை குடிநீர் தொட்டி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி, இளைஞர்கள் 3 பேர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து போராட்டம் கை விடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 ஊராட்சிகளில் 264 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. குண்டடம் அருகே சிறு கிணறு ஊராட்சியில் மட்டும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவில்லை. மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்து 493 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.