

சென்னை: போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணும் வகையில் பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களையும் ஒழுங்குபடுத்துங்கள் எனப் போக்குவரத்து போலீஸாருக்கு கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும், மெட்ரோ ரயில்பணி, மழைநீர் வடிகால்வாய் பணி உள்ளிட்ட பல்வேறுபணிகளால் சாலைகள் சேதமடைந்து வழக்கமான வேகத்தில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் உள்ளது. இவற்றையும் மீறி வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல போக்குவரத்து போலீஸார் தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து,நவீன கருவி மூலம் வாகனங்களின் எண்ணிக்கையைக் கண்டறிந்து தேவைக்குத் தகுந்தாற்போல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகின்றன. மேலும், சிக்னல்களில் வாகனங்கள் எவ்வளவு நீளத்துக்கு நிற்கின்றன, வாகனங்களின் அடத்தியைக் கண்டறிந்துஉடனடி நடவடிக்கை எடுக்க ட்ரோன் கேமரா பயன்படுத்தப்படுகிறது.
அதோடு மட்டுமல்லாமல் 300-க்கும் மேற்பட்ட சாலை சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தப் போக்குவரத்து போலீஸார் களப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், போக்குவரத்து காவல் உதவி ஆணையர்கள் முதல் இணை ஆணையர்கள் வரையிலான போலீஸ் அதிகாரிகளை நேற்று நேரில் அழைத்து போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஆர்.சுதாகர் ஆலோசனை வழங்கினார்.
அப்போது, அரசு பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் சாலைகளில் ஒழுங்கற்று சென்றால் அவற்றை ஒழுங்குபடுத்த வேண்டும். பேருந்துகள், அவர்களுக்கான நிறுத்தத்தில் நின்றுசெல்லும் வகையில் தனிப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும். சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும். மெட்ரோ ரயிலுக்கான வழித்தடம் அமைக்கும் பணியால் சாலைகள் குறுகலானால், அதற்கு மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும். போக்குவரத்து போலீஸார் லஞ்சம் வாங்கினால் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.
மேலும், நெரிசலுக்கு நிரந்ததீர்வு காணும் வகையில் போக்குவரத்து காவலில்படிப்படியாக தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட உள்ளனஎனவும் கூடுதல் காவல் ஆணையர் சுதாகர் தெரிவித்தார்.