Published : 06 Dec 2017 09:09 AM
Last Updated : 06 Dec 2017 09:09 AM

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்தான்: தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி உறுதி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டியிட்டாலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்தான் பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் முடிந்தபோது மொத்தம் 145 மனுக்கள் பெறப்பட்டிருந்தன. வழக்கமாக தேர்தலின்போது பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில், ஒரு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் 4 வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே பொருத்தப்படும். இதன்படி, 63 வேட்பாளர், ஒரு நோட்டா என 64 இடம் மட்டுமே அதில் இருக்கும். தற்போது ஆர்.கே.நகரில் அதிக அளவு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளதால் ஏற்கெனவே உள்ள இயந்திரங்களை பயன்படுத்த முடியாது. அதேநேரத்தில், இனி வாக்குச்சீட்டுக்களை பயன்படுத்துவதில்லை என்று தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, இசிஐஎல் நிறுவனத்திடம் இருந்து 6 ஆயிரம் நவீன வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. அவற்றை பயன்படுத்தி, 384 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் தேர்தலை நடத்த முடியும். டிச.7-ம் தேதி இறுதியாக களத்தில் இருப்பவர்கள் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்களும், ‘எம் 3’ கட்டுப்பாட்டு இயந்திரமும் வரவழைக்கப்படும்.

இந்த இயந்திரம் பயன்படுத்தப்படுவதால், யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் விவிபேட் இயந்திரம் பயன்படுத்தப்பட மாட்டாது. வாக்குப்பதிவு இயந்திரத்தில், முதலில் தேசிய கட்சி, அடுத்து அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி, அதன்பின் பதிவு பெற்ற கட்சி வேட்பாளர்களைத் தொடர்ந்து, இறுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் பெயர், புகைப்படம் அகரவரிசைப்படி இடம் பெறும்.

சின்னம்

ஆர்.கே.நகரில் தேர்தலை அமைதியாக நடத்த கோரப்பட்ட 25 கம்பெனி துணை ராணுவப்படையில் 15 கம்பெனி துணை ராணுவப் படையினர் 7-ம் தேதி தொகுதிக்கு வருகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முதலில் சின்னம் ஒதுக்கப்படும். ஒரு சின்னத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கேட்டால், பதிவு செய்த கட்சிகளின் வேட்பாளர்களுக்கு முதலில் ஒதுக்கப்படும். அதிலும் போட்டியிருந்தால் குலுக்கல் நடத்தப்படும். பதிவு செய்த கட்சிகள் கேட்காவிட்டால்தான் சுயேச்சைளுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும்.

வீடு வீடாக பிரச்சாரத்தை தவிர்த்து, மற்ற நேரங்களில் வேட்பாளர் வாகனங்களில் வீதிகளில் பிரச்சாரம் செய்தாலும், உடன் வருவோர் எண்ணிக்கையை குறிப்பிட்டு ஆன்லைனில் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோர வேண்டும். இல்லாவிட்டால் உடன் வருவோர் செலவுகள் வேட்பாளர் கணக்கில் உடனடியாக சேர்க்கப்படும்.

இவ்வாறு தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி லக்கானி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x