Published : 31 Jul 2014 12:45 PM
Last Updated : 31 Jul 2014 12:45 PM

புதிதாக 60 துணை மின் நிலையங்கள்: பேரவையில் ஜெயலலிதா அறிவிப்பு

நடப்பு நிதி ஆண்டில் 60 துணை மின் நிலையங்கள் மற்றும் 2,500 சுற்று கிலோ மீட்டர் உயர் அழுத்த மின் வழித்தடப் பாதைகள் 5,284 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அவர் இன்று வாசித்த அறிக்கையில்:

" 1.தமிழகத்தின் புனல் மின் நிலையங்கள் காலை மற்றும் மாலை நேரத்தில் உள்ள உச்ச மின் தேவையை நிறைவேற்ற துணை புரிகின்றன. புனல் மின் நிலையங்கள் படிப்படியாக புனரமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை, மேட்டூர் மற்றும் பாபநாசம் புனல் மின் நிலையங்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. பெரியார் புனல் மின் நிலையம் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 43 ஆண்டுகளாக இயங்கி வருகின்ற கோவை மாவட்டத்திலுள்ள சோலையார் புனல் மின் நிலையம்-1-ன் இரு அலகுகளையும் புதுமைப்படுத்தி நவீனமயமாக்கும் பணி மற்றும் இவ்வலகுகளின் நிறுவுத் திறனை தலா 35 மெகாவாட்டிலிருந்து 42 மெகாவாட்டாக அதிகரிக்கும் பணி ஆகியவை 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

2. நுகர்வோருக்கு தடையற்ற தரமான மின்சாரம் வழங்கப்பட வேண்டுமென்றால், கூடுதல் மின் உற்பத்திக்கு ஏற்ப மின் தொடரமைப்பு மற்றும் பகிர்மானம் ஆகியவற்றின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியம். கடந்த மூன்று ஆண்டுகளில் 134 துணை மின் நிலையங்கள் நிறுவப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக, நடப்பு நிதி ஆண்டில் 60 துணை மின் நிலையங்கள் மற்றும் 2,500 சுற்று கிலோ மீட்டர் உயர் அழுத்த மின் வழித்தடப் பாதைகள் 5,284 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இந்த 60 துணை மின் நிலையங்களில், மூன்று 400 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், ஒன்பது 230 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், முப்பத்தியெட்டு 110 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள், பத்து 33 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் அடங்கும்.

3. இது தவிர, சென்னை மாநகரின் மின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மேலும் இரண்டு 230 கிலோவோல்ட் துணை மின் நிலையங்கள் 338 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். இவற்றில், மேற்கு மாம்பலத்தில் 92 கோடியே 83 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு துணை மின் நிலையமும், போரூரில் 245 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒரு துணை மின் நிலையமும் அமைக்கப்படும்.

4. தமிழ்நாட்டில் அபரிமிதமாக கிடைக்கும் சூரிய மின் சக்தியை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் சூரிய மின் சக்திக் கொள்கை வெளியிடப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, மாநிலத்தின் தென் மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சூரிய மின் சக்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தை மின் தொடரமைப்பில் சேர்ப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 400 கிலோவோல்ட் துணை மின் நிலையம் 435 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம் முத்துராமலிங்கபுரத்தில் 230 கிலோவோல்ட் துணை மின் நிலையம் 47 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் அமைக்கப்படும்.

5. மின் தொடரமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் மின் பகிர்மானக் கட்டமைப்பை செம்மைப்படுத்தினால் தான் நுகர்வோருக்கு சீரான மின்சாரம் கிடைக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் 28,000 மின் விநியோக மாற்றிகள் 660 கோடி ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்படும்.

6. தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளில் 30 லட்சம் புதிய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. இதன் தொடர்ச்சியாக நடப்பு நிதியாண்டில் மேலும் 10 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்படும்.

அரசின் மேற்காணும் நடவடிக்கைகள் மக்கள் உயர்வுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x