

திருவண்ணாமலை: செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் ஊராட்சி மன்றத் தலைவி கணவரின் மண்டை உடைந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சென்னசமுத்திரம் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் திவ்யா டாரஸ் கோபி தலைமை வகித்தார். கூட்டத்தில், கிராமத்தில் நடைபெற்ற பணிகள் மற்றும் வரவு - செலவு கணக்குகளை ஊராட்சி மன்றம் மூலம் தெரிவிக்கப்பட்டன.
அப்போது, அதே ஊராட்சியில் 3 நீர் மோட்டார்கள் காணவில்லை என முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோபி கேள்வி எழுப்பினார். இதனால், இரண்டு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த ஊராட்சிமன்ற தலைவியின் கணவரான டாரஸ் கோபியை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கோபியின் ஆதரவாளர்கள் இரும்பு கம்பியால் தாக்கினர்.
இதில், அவரது மண்டை உடைந்தது. இதனால், கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து செங்கம் காவல் நிலையத்தில் ரத்த காயங்களுடன் புகார் அளிக்க சென்ற கோபி திடீரென மயங்கி விழுந்தார். அப்போது, காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலர் உதவியுடன், செங்கம் அரசு மருத்துவமனையில் கோபி அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான கோபி செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து செங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.