Last Updated : 07 Dec, 2017 09:17 AM

 

Published : 07 Dec 2017 09:17 AM
Last Updated : 07 Dec 2017 09:17 AM

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!

இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள். ‘உங்க பையன் ஸ்கூலுக்கே போறதில்லையா.. எப்பப் பார்த்தாலும் வீட்லயே இருக்கான்..’ என்கிறார் ஒரு பெண். அதற்கு இன்னொரு பெண், ‘அந்தக் கொடுமையை ஏன் கேக்குறீங்க.. ஒருநாள், ஸ்கூலுக்குப் போனவன் வீட்டுக்கு வரல. பதறிப் போயி, வாட்ஸ் - அப்பிலும் ஃபேஸ்புக்கிலும் இவனோட போட்டோவைப் போட்டு, ‘யாராச்சும் இவனப் பார்த்தா கொண்டாந்து ஒப்படைங்க’ன்னு சொல்லிருந்தோம்.

அன்னைக்கி சாயந்தரமே, பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல விளையாடிட்டு இருந்த இவனைத் தேடிப் பிடிச்சுக் கொண்டாந்து வீட்டுல சேர்த்துட்டாங்க. அதுக்கப்புறம் நடந்தது தான் ஏக களேபரம். நாங்க வாட்ஸ் - அப்பில் போட்ட அந்த மெசேஜ் இன்னமும் சுத்திக்கிட்டே இருக்கு. அதனால, இவன் எப்ப வெளியில போனாலும் தேடிப்பிடிச்சுக் கொண்டாந்து வீட்டுல விட்டுடுறாங்க. அதனால, இவன் ஸ்கூலுக்கே போக முடியல’ என்கிறார்.

யதார்த்தமான உண்மை

இது தமாஷுக்காக வாட்ஸ் - அப்பில் பகிரப்பட்ட கற்பனை உரையாடல்தான். ஆனால், இன்றைக்கு வாட்ஸ் - அப்பில் ஃபார்வர்டு செய்யப்படும் பல தகவல்கள் சொல்லும் யதார்த்தம் இதுதான்.

‘நாகையில் சுனாமி’ என்ற தலைப்பில் வந்த ஒரு வீடியோவானது நவம்பர் 25-லிருந்து 30-ம் தேதி வரை வாட்ஸ் - அப்பில் பல்வேறு குழுக்கள் மூலமாக எனக்கு சுமார் 200 தடவைகள் பகிரப்பட்டது. சுனாமி சமயங்களில் மக்கள் எப்படி தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு தரப்பில் நடத்தப்பட்ட ஒத்திகை பிரச்சாரத்தை அப்படியே படம் பிடித்து, நிஜமாலுமே சுனாமி வரப்போவது போலவும், வந்துவிட்டது போலவும் வாட்ஸ் - அப்பில் தகவலைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

விக்னேஷ் விவகாரம்

இதன் உண்மைத் தன்மையை அறியாத பலர், இதை தங்களுக்குத் தெரிந்த (தெரியாத) பலருக்கும் வாட்ஸ் - அப் குழுக்களில் ஒரு வாரமாய் பரப்பினார்கள். இதைப் பார்த்துவிட்டுப் பீதியடைந்த பலர், யாரைப் பார்த்தாலும், ‘மறுபடி சுனாமி வரப்போவுதாமே!’ என விசாரித்துக் கொண்டே இருந்தார்கள். இன்னும் எங்கெல்லாம், எப்படியெல்லாம் அந்த வீடியோ சுற்றுகிறதோ தெரியவில்லை.

இப்படித்தான், விக்னேஷ் என்பவர் தவறவிட்ட கல்விச் சான்றுகள் அனைத்தும் தன்னிடம் உள்ளதாக மானாமதுரையைச் சேர்ந்த ஒருவர் தனது அலைபேசி எண்ணுடன் வாட்ஸ் - அப் தகவலை பதிவிட்டிருந்தார். இதையடுத்து, அந்த எண்ணில் தொடர்பு கொண்டால், அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அந்த சம்பவம் எப்போது நடந்ததோ தெரியவில்லை. விக்னேஷ் கைக்கு அவரது கல்விச் சான்றிதழ்கள் போய்ச் சேர்ந்ததா என்பதைக்கூட தெரிந்து கொள்ளாமல் அந்தத் தகவலை இன்னமும் சிலர் ஃபார்வர்டு செய்துகொண்டிருக்கிறார்கள் (உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா பாஸ்?!)

வாரத்துக்கு ஒருமுறையாவது..

இதேபோல், சென்னையில் புதுக்கோட்டை வாலிபர் ஒருவர் தலையில் அடிபட்டு சாலையில் கிடக்கிறார் என்ற தகவலும், துபாய் நாட்டில் நாகை மாவட்ட வாலிபர் கொடுமைப்படுத்தப்படுகிறார் என்ற பதிவும் ஆண்டுக் கணக்கில் வாட்ஸ் - அப்பில் ஊர் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இது இப்படி என்றால், இன்னும் சிலரோ வேறு மாதிரி தகவல்களைப் பகிர்வதில் ஆவலாக இருக்கிறார்கள். ‘ஒலியும், ஒளியும் பார்த்த கடைசி தலைமுறை நாம்தான்.. ஒனிடா மண்டையனை பார்த்த கடைசி தலைமுறையும் நாம் தான் என்ற தகவல்கள் எல்லாம் இவர்களின் உபயம்(!) தான்.

நாசா அனுப்பும் செயற்கைக் கோள்கள் காரைக்காலில் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலுக்கு நேரே வரும் போது ஒரு வினாடி செயலிழந்து விடுகின்றன, உலகின் மையப்புள்ளி சிதம்பரத்தில் நடராஜர் கால் ஊன்றியுள்ள இடம் தான். இதுபோன்ற ‘அதிரடி’யான ஆன்மிகத் ‘தகவல்’களையும் வாரத்துக்கு ஒருமுறையாவது பகிர்ந்து, மகிழ்ந்து கொள்கிறார்கள்.

தமிழனா இருந்தா ஷேர் பண்ணு

இன்னும் சிலரோ, ‘இது மிக அவசரம். இன்னும் ஒரே நாள் தான் பாக்கியிருக்கிறது. உடனே உங்களது வாக்கைப் பதிவு செய்யுங்கள்’ என்று நம்மை அவசரப்படுத்துகிறார்கள். சமீப நாட்களாக இன்னொரு தகவல் வேகமாக பகிரப்படுகிறது. அன்டார்டிக்காவில், திருவள்ளுவர் கைப்பட எழுதிய திருக்குறள் புத்தகம் கிடந்தது. நாசா விஞ்ஞானிகள் அதை கார்பனேட்டிங் செய்து பார்த்தபோது அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது எனத்தெரிய வந்துள்ளது என்கிறது அந்தத் தகவல். இதன் உண்மைத் தன்மைக்கு யார் உத்திரவாதம் தந்தார்கள் என்று தெரியவில்லை. திரும்பத் திரும்ப இதை பரப்பிக் கொண்டே இருக்கிறார்கள்.

இன்னும் சில வாட்ஸ் - அப் பதிவாளர்கள், ‘தமிழனா இருந்தா ஷேர் பண்ணு..’ என்று நமது இனப் பற்றுக்கும் பரீட்சை வைக்கிறார்கள். சிலர், ‘மனிதாபிமனாத்துடன் தயவு செய்து இதைப் பகிருங்கள்’ என்று கிளறிவிடுவதால், இரக்க சுபாவம் உள்ள நம் மக்கள், சும்மா ரெண்டு பேருக்கு தள்ளி விடுவோமே என்று நினைத்தும் ஷேர் செய்கிறார்கள்.

சம்பந்தமில்லாத வீடியோ காட்சிகள்

மகாபாரதத்தில் பீமன் பயன்படுத்திய கெதை ஆயுதம் இந்தோனேசியாவில் கிடைத்து விட்டது, மகாராஷ் டிராவில் பூமிக்கடியில் சிவன் சிலை ஒன்று கிடைத்துள்ளது. இதற்கு பல்லாயிரக் கணக்கான பாம்புகள் காவல் இருந்தன. இப்படியெல்லாமும் இஷ்டத்துக்குத் தகவல்களைப் பரப்பி, எங்கோ எதற்காகவோ எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளையும் அத்துடன் இணைத்து நம்மை நம்ப வைக்கப் பார்க்கிறார்கள்.

அதேசமயம், வாட்ஸ் - அப் மூலம் பயனுள்ள பல நல்ல விஷயங்களும் பகிரப்படுகின்றன. அவற்றால் பல நல்ல காரியங்கள் நடப்பதையும் மறுப்பதற்கில்லை. ஆனால், சில சமயங்களில் ஓரளவுக்கு விவரம் தெரிந்த நாமும்கூட வாட்ஸ் - அப்பில் வரும் தகவல்களின் உண்மைத் தன்மையைப் பற்றி அறியாமல் நமது நண்பர்களுக்குப் பகிர்ந்து விடுகிறோம். நாம் பகிராவிட்டால் சீக்கிரமே நமது நண்பர்கள் மூலமாக நமக்கே அந்தத் தகவல் வந்து சேருமே என்ற உங்களின் மைண்ட் வாய்ஸ் எனக்கும் கேட்கிறது. ஆனால், உறுதிப்படுத்தப்படாத, தகவலை நாம் மற்றவர்களுக்கு ஃபார்வர்டு செய்வதால் அவர்களின் கவனத்தைச் சிதைப்பதுடன் அவர்களது பொன்னான நேரத்தையும் வீணடிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல, அலைபேசியின் பேட்டரி எனர்ஜியை காலிசெய்வதுடன் ‘மொபைல் டேட்டா’வுக்கும் தவணை முறையில் வேட்டு வைக்கிறோம். எனவே, உறுதியாகத் தெரியாத ஒரு தகவலை, நீங்கள் (தமிழராகவே இருந்தாலும்!) தயவு செய்து மற்றவர்களுக்குப் பகிராதீர்கள். பகிர்ந்து அவர்களின் நிம்மதியைக் கெடுக்காதீர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x