

ஆர்.கே.நகரில் ஜனநாயகம் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் உடனடியாக தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஓட்டுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும். எத்தனை முறை பணம் கொடுக்கப்பட்டாலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவடைந்து விட்டது. நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் செலவு முடிந்துவிட்ட மனநிலையில் முக்கிய அரசியல் கட்சிகளும், பல மாதங்கள் உழைத்தாலும் கிடைக்காத பணம் சில நாட்களில் கிடைத்ததால் மக்களும், தலைவலி ஒழிந்ததால் தேர்தல் அதிகாரிகளும் மகிழ்ச்சியாகவும், மன நிறைவுடனும் இருக்கிறார்கள். ஆனால், பாவம் ஜனநாயகம் தான் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் எனக்குத் தெரிந்து, 55 ஆண்டுகளுக்கு முன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியிலேயே தொடங்கி விட்டது. எனினும் அப்போது ஓட்டுக்குப் பணம் தருவது இலைமறை காய்மறையாகவே நடைபெற்று வந்தது. ஆனால், இப்போது நாளிதழ்களில் விளம்பரம் செய்யாதது மட்டும் தான் குறை என்று சொல்லும் அளவுக்கு வெளிப்படையாகவே பண வினியோகம் நடந்திருக்கிறது.
ஆளும்கட்சியின் சார்பில் ஒரு ஓட்டுக்கு ரூ.6,000 வீதம் ஒரே நாளில் ரூ.120 கோடி வினியோகிக்கப்பட்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன் வரை ஆளுங்கட்சியின் அதிகார மையமாக விளங்கி, சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் பொதுவானவர்களுக்கு ரூ.8000 வீதமும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவினருக்கு ரூ.12,000 வீதமும் வாரி இறைத்திருக்கின்றனர். ஆண்ட கட்சி சார்பிலும் ஒரு ஓட்டுக்கு ரூ.2000 முதல் 3000 வரை வினியோகம் செய்யப்பட்டிருக்கிறது. 10 தேர்தல் பார்வையாளர்கள் இருந்தாலும் பண வினியோகம் தடுக்கப்படவில்லை.
இதைவிடக் கொடுமை என்னவென்றால், ஓட்டுக்கு பணம் கொடுத்த 3 வேட்பாளர்கள் தரப்புமே தாங்கள் உத்தமர்கள் போலவும், மற்ற கட்சியினர் தான் வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்ததாக தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்துள்ளனர். பண வினியோகம் நடந்ததால் இடைத்தேர்தலை ஒத்தி வைக்கலாமா? என்று கேட்டால், ‘‘அது கூடாது. ஓட்டுக்கு பணம் கொடுத்திருந்தாலும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்’’ என்று அலறுகின்றனர். இது என்ன வகையான ஜனநாயக பக்தி என்பது தெரியவில்லை. அனைத்துக் கட்சிகளுமே ஓட்டுக்கு பணம் கொடுத்துள்ளன என்பதற்கு இதுவே சாட்சி.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த இடைத்தேர்தல், பண வினியோகப் புகார்களின் அடிப்படையில் தான் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. அதைவிட இப்போது அதிக அளவில் பணம் வினியோகிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலை ஒத்தி வைக்க தேர்தல் ஆணையம் தயங்குகிறது. இப்போது ஒத்திவைத்து விட்டு இன்னும் சில மாதங்கள் கழித்து தேர்தல் நடத்தினாலும் இதேநிலை தான் தொடரும் என்று தங்களுக்குத் தாங்களே நியாயம் கற்பித்துக்கொண்டு ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலை நடத்துவதற்கு ஆணையம் தயாராகிவிட்டது. அதாவது ஜனநாயகப் படுகொலையைத் தடுக்க வேண்டிய தேர்தல் ஆணையமே,‘‘நாங்கள் கண்களை மூடிக் கொள்கிறோம். அதற்குள் ஜனநாயகத்தை கொன்று விடுங்கள். பிறகு நாங்கள் விழித்துக் கொண்டு ஜனநாயகம் இறந்து விட்டதாக அடக்கம் செய்து விடுகிறோம்’’ என்பது போல நடந்து கொள்கிறது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கத் தேர்தல் ஆணையம் தவறுவது இது தான் முதல் முறை என்று கூற முடியாது. 2005-ஆம் ஆண்டு காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் தொடங்கி இதுதான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திருமங்கலம், திருவரங்கம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்கள் மற்றும் தஞ்சாவூர், அரவக்குறிச்சி பொதுத்தேர்தல்களில் இது உச்சக்கட்டத்தை அடைந்தது.
2016-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் பணம் வினியோகிக்கப்படாத தொகுதிகள் ஒன்று கூட இல்லை. அதிமுக ரூ.10,000 கோடியும், திமுக ரூ.6,000 கோடியும் வாக்காளர்களுக்கு வாரி இறைத்து தான் வெற்றி பெற்றுள்ளன. மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நடத்தப்படும் ஆட்சி தான் ஜனநாயகம் ஆகும். மாறாக பணம் சம்பாதிப்பதற்காக பணத்தைக் கொடுத்து வாக்கு வாங்கி அமைக்கப்படும் ஆட்சியை பணநாயகம் என்று தானே அழைக்க முடியும். இதில் ஜனநாயகம் எப்படி உயிர் வாழ முடியும்?
இதேநிலை இனிவரும் தேர்தல்களிலும் தொடர்ந்தால் ஜனநாயகம் என்பதற்கு அர்த்தமில்லாமல் போய் விடும். இப்படியெல்லாம் தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைப் படுகொலை செய்வதற்கு பதிலாக, இந்திய விடுதலைக்கு முன் வரி செலுத்துபவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நிலை இருந்தது போல, இப்போதும் ஒரு தேர்தலுக்கு ரூ.10,000 கோடி வரை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வலிமையுள்ள கட்சிகள் மட்டும் தான் தேர்தலில் போட்டியிட முடியும் என அறிவித்து விடலாம்.
அவ்வாறு செய்வதன் மூலம் குறைந்தபட்சம் ஜனநாயகப் படுகொலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரமாவது கிடைக்கும். அதைவிடுத்து ஓட்டுக்கு பணம் கொடுப்பதை வேடிக்கைப் பார்த்து விட்டு, வாக்குகளை விலைக்கு வாங்கி வெற்றி பெறுபவர்கள் தான் மக்கள் பிரதிநிதிகள் என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பது கேவலமானது. இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையமும், அதன் அதிகாரிகளும் வெட்கப்பட வேண்டும்.
இந்தியாவில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் உடனடியாக தேர்தல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்தது நிரூபிக்கப்பட்டால் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும். எத்தனை முறை பணம் கொடுக்கப்பட்டாலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுத்த வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
10 விழுக்காட்டுக்கும் கூடுதலான தொகுதிகளில் ஒரு கட்சி சார்பில் பணம் வினியோகிக்கப்பட்டால் அந்தக் கட்சியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதற்கேற்ற வகையில் சட்டத் திருத்தங்களை செய்ய தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் நடப்புக்கூட்டத் தொடரில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.