

நாமக்கல்/கரூர்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குறித்து சமூக ஊடகத்தில் அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக எழுந்த புகாரின் அடிப்படையில், ராசிபுரத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகியை போலீஸார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் பிரவீன்ராஜ். பாஜக இளைஞரணி சமூக ஊடகப்பொறுப்பாளர். இவர் கடந்த ஆக. 10-ம் தேதி `எக்ஸ்' தளத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி. குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவிட்டதாக கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், கரூர் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிரவீன்ராஜைத் தேடிவந்தனர். இந்நிலையில், நேற்று காலை ராசிபுரம் அருகேமுத்துகாளிப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் இருந்த பிரவீன்ராஜை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவரை கரூர் அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல் மாவட்ட பாஜகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.