

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் காவிரி, டாஸ்மாக் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநரிடம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா நேற்றுமனு அளித்தார்.
சென்னை, ராஜ்பவனில்ஆளுநர் ஆர்.என்.ரவியை தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையிலான நிர்வாகிகள் நேற்று சந்தித்து முக்கியப்பிரச்சினைகள் குறித்து மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா கூறியதாவது:
காவிரி நீர் உரிமை: போதிய அளவில் தண்ணீர் இருப்பு வைத்துள்ள போதிலும் தமிழகத்துக்கு தர கர்நாடக அரசு மறுக்கிறது. நமது நீர்வளத்துறை அமைச்சர் டெல்லிக்கு சென்று வந்தபோதும், பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை. ஆண்டுதோறும் நீருக்காக கர்நாடகத்திடம் நாம் ஏன் கையேந்தி நிற்க வேண்டும். காவிரியில் தமிழகத்துக்கான உரிமையை பெற்றுத்தர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் கேட்டுக் கொண்டோம். இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் மத்திய, மாநில அரசுகள் செவிசாய்த்து தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
என்எல்சி விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிமையை பெற்றுத் தந்து, பிரச்சினைகளைத் தீர்க்குமாறு வலியுறுத்தினோம். தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கச்சத்தீவைமீட்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தோம். தமிழகத்தின் அனைத்து இடங்களிலும் கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பாகவும் ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்.
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: சம வேலைக்கு சம ஊதியம் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்கள் குறித்து கவனத்தில் கொள்வதாக ஆளுநர் கூறினார்.
தீபாவளிக்கு டாஸ்மாக் வசூல் இலக்கு நிர்ணயிக்கும் தமிழக அரசு, இளைஞர்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். படிப்படியாக மதுக்கடைகள் இல்லாத நிலை உருவாக வேண்டும்.
ஆளுநர் வாக்குறுதி: இதுபோன்று மாநிலத்தில் நடக்கும் பிரச்சினை குறித்து தெரிவிக்கும்போது, மத்திய அரசிடம் நமக்கான உரிமையை ஆளுநர் பெற்றுத்தருவார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கைமேற்கொள்ளப்படும் என ஆளுநரும் வாக்குறுதி அளித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சந்திப்பின்போது, தேமுதிக துணைச் செயலாளர் பார்த்தசாரதி, மாவட்டச் செயலாளர்கள் ஆனந்தன், சூர்யா, மாறன், செந்தில்குமார், வேல்முருகன், பழனி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.