

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் பாரத மாதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் 60-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் அருகே, பாரத மாதாவின் உருவப்படத்துக்கு, விஷ்வ இந்து பரிஷத் சார்பில் மரியாதை செலுத்த நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. பஜ்ரங்தள் மாநில அமைப்பாளர் பீமாராம் தலைமையில், விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் 14 பேர், பாரதமாதா படத்துடன் நேற்று காலை அங்கு வந்தனர்.
இதற்கிடையே அங்கு பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி மதியழகன், டிஎஸ்பி.க்கள் மகேஷ் குமார், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.
‘பாரத மாதா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்த அனுமதி கிடையாது’ என, போலீஸார் கூறினர்.
‘பாரத மாதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தக் கூடாது என, காவல்துறை கெடுபிடி காட்டுவது ஏன்?’ எனக் கேட்டு, வி.எச்.பி.யினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.
உண்ணாவிரத போராட்டம்: தொடர்ந்து போலீஸாரின் தடையை மீறி, பாரத மாதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அவர்கள் 14 பேரையும் போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அங்கு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.