திருப்புவனத்தில் பாஜக நிர்வாகிகளிடையே மோதல் - ஏமாற்றத்துடன் திரும்பிய ஹெச்.ராஜா

திருப்புவனத்தில் பாஜக நிர்வாகிகளிடையே மோதல் - ஏமாற்றத்துடன் திரும்பிய ஹெச்.ராஜா

Published on

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா முன்னிலையில் அக்கட்சி நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்டதால் அவர் தனது பிறந்தநாள் விழாவில் பங்கேற்காமல் பாதிவழியில் திரும்பினார்.

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பிறந்தநாளையொட்டி நேற்றுமுன்தினம் இரவு திருப்புவனம் மணிமந்திர விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாட்டுக்கு பாஜகவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு வந்த ஹெச்.ராஜாவுக்கு பாஜக கூட்டுறவு பிரிவு மாநிலச் செயலாளர் பாலரவிராஜன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது அங்கு வந்த ஒன்றியத் தலைவர் மோடி பிரபாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஹெச்.ராஜாவிடம் தங்களுக்கு தெரிவிக்காமல், நிகழ்ச்சியை எப்படி நடத்தலாம் என்று கேட்டனர். இதில் பாலரவிராஜனுக்கும், மோடி பிரபாகரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் பாலரவிராஜனின் சட்டை கிழிந்தது. இதனால் ஹெச்.ராஜா அதிருப்தி அடைந்தார்.

அங்கிருந்த போலீஸார், பாஜக நிர்வாகிகளை சமரசப்படுத்தியதோடு, ஹெச்.ராஜாவையும் பாதுகாப்பாக காரில் அனுப்பி வைத்தனர்.

இதனால் கோயில் வழிபாட்டில் பங்கேற்காமலும், தொடர்ந்து கொந்தகை பகுதியில் நடக்கவிருந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு செல்லாமலும், பாதிவழியில் திரும்பிச் சென்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in