உளுந்தூர்பேட்டை அருகே 2 குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழப்பு: காப்பாற்ற சென்ற பெண்ணின் தந்தையும் மரணம்

உளுந்தூர்பேட்டை அருகே 2 குழந்தைகளுடன் பெண் தீயில் கருகி உயிரிழப்பு: காப்பாற்ற சென்ற பெண்ணின் தந்தையும் மரணம்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டையில் தனது பிள்ளைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த பெண், அவரது இரு குழந்தைகளுடன் தீயில் சிக்கி உயிரிழந்தார். அவர்களை காப்பாற்ற முயன்ற அந்தப் பெண்ணின் தந்தையும் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த நத்தாமூர் கிராமத்தைச் சேர்ந்த பொன்னுரங்கத்துக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இதில் 3-வது மகள் திரவியம் (42).நத்தாமூரை அடுத்த கிளாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மதுரைவீரன் என்பவருடன் திரவியத்துக்கு திருமணமான நிலையில், ரியாஷினி (5), விஜயக்குமாரி (3) என இரு மகள்கள் உள்ளனர்.

திரவியத்துக்கும், மதுரைவீரனுக்கும் அடிக்கடி குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தனது தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்த திரவியம், தந்தை பொன்னுரங்கத்துடன் வசித்து வந்துள்ளார். இருப்பினும் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் மன உளைச்சலுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

நீண்டநாட்களாக தாய் வீட்டில் இருக்கும் திரவியத்தை, கணவருடன் சேர்த்து வைப்பது தொடர்பாக பொன்னுரங்கம் மற்றும் அவரது மகன்களான விஜயகுமார், சதானந்தம் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு மதுரை வீரனை அழைத்து தங்களதுவீட்டுக்கு வெளிப்புறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது வீட்டுக்குள் பயங்கர சத்தம் கேட்டது. வெளியில் இருந்தவர்கள் பதறியடித்துக் கண்டு உள்ளே சென்று பார்த்தபோது, வீடு முழுவதும் தீ கொழுந்துவிட்டு எரிந்து, புகை மண்டலமாக காட்சியளித்தது.

திரவியம் மற்றும் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இரு குழந்தைகள் மற்றும் அவரது சகோதரன் சதானந்தத்தின் மகன் விவேக்மிட்டல் ஆகியோர் தீயில் சிக்கிக் கொண்டனர்.

தீயில் சிக்கியவர்களை மீட்க விஜயகுமார், சதானந்தம் மற்றும் அவரது தந்தை பொன்னுரங்கம் ஆகியோர் முயற்சித்தபோது, திரவியம் மற்றும் அவரது இருமகள்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். அதேவேளையில் புகைமூட்டத்தில் மூச்சுத்திணறி பொன்னுரங்கமும் உயிரிழந்தார்.

பலத்த தீக்காயமடைந்த விவேக்மிட்டல், மயங்கி விழுந்த விஜயக்குமார், சதானந்தம் ஆகியோர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தகவலறிந்த திருநாவலூர் போலீஸார், தீயில் கருகி உயிரிழந்த மூவர் உடலுடன், பொன்னுரங்கத்தின் உடலையும் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுமதித்தனர்.

இச்சம்பவம் மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா அல்லது தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனரா என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in