Published : 01 Oct 2023 04:06 AM
Last Updated : 01 Oct 2023 04:06 AM
சென்னை: ஒப்பந்த நிறுவனம் மூலம் 234 ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்வு செய்வதற்கான டெண்டரை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் 8 போக்குவரத்துக் கழகங்களின் கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பேருந்துகளை இயக்குவதில் பெரும் சிக்கல் இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 டிசிசி பணியிடங்களையும் (ஓட்டுநர், நடத்துநர் பணிகளை ஒரு சேர மேற்கொள்வோர்),
கும்பகோணம் போக்குவரத்துக் கழகத்தில் 122 ஓட்டுநர் பணியிடங்களையும் நிரப்ப அரசு அனுமதிஅளித்தது. இதையடுத்து, கும்பகோணம் (174), சேலம் (254), கோவை (60), மதுரை (136), திருநெல்வேலி (188) ஆகிய போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 812 டி.சி.சி காலிப் பணியிடங்களை நிரப்ப சம்பந்தப்பட்ட மேலாண் இயக்குநர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
தற்போது, விரைவு போக்குவரத்துக் கழகத்தில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரம், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இந்நிலையில், ஒப்பந்த நிறுவனம் மூலம் 234 ஓட்டுநர், நடத்துநர்கள் தேர்வு செய்தவதற்கான டெண்டர் நேற்று வெளியிடப்பட்டது.
அதில் கூறியிருப்பதாவது: அரசு, தனியார், தன்னாட்சி நிறுவனங்களுக்கு 250-க்கும் அதிகமான ஓட்டுநர், நடத்துநர்களை ஒப்பந்த அடிப்படையில் வழங்கிய அனுபவம் கொண்ட நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்நிறுவனங்களில் மாநகர போக்குவரத்துக் கழகத்துக்கு 117 ஓட்டுநர்கள், 117 நடத்துநர்களை பணிக்கு அனுப்ப விரும்பும் நிறுவனங்கள் இணைய வழியில் மட்டும் அக்.6-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க அக்.31-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை ஓட்டுநர் பணிக்கு ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியாளர்களை நியமிக்க சிஐடியு எதிர்ப்பு தெரிவித்து, வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியது. இது தொடர்பாக தொழிலாளர் நலத்துறை முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இதில், புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படக் கூடாது, நோட்டீஸ் வழங்குவதற்கு முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என பேச்சுவார்த்தையில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், ஒப்பந்த நிறுவனம் மூலம் ஓட்டுநர்கள், நடத்துநர்களை நியமிப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்பு வெளியாகியிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT