

நாகப்பட்டினம்: தமிழகத்தில் அரசியல் தீண்டாமை இருக்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: நடிகர் சித்தார்த் ஒரு கலைஞர். அவருக்கும் காவிரி நீர் பிரச்சினைக்கும் சம்பந்தமில்லை. அவர் காவிரி நீர் கொடுக்க வேண்டும் என்று கேட்கவும் இல்லை.
இது அரசியல் தலைவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டிய விஷயம். அவரை சுற்றி நின்று கோஷமிட்டவர்களை அங்குள்ள காவலர்கள் ஏன் அப்புறப்படுத்தவில்லை? தமிழகத்தில் நாங்கள் இப்படி செய்திருந்தால், இங்குள்ள காவலர்கள் எங்களை கைது செய்து அப்புறப்படுத்துவார்கள். இந்த அடிப்படை பண்பு, மாண்பு அவர்களிடம் இல்லை.
அணையின் பாதுகாப்புக்கு ராணுவத்தை நிறுத்தி, காவிரி நீரை பங்கிட்டு கொடுத்தால் பிரச்சினை ஏற்படாது. தமிழகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர் மகளை, திமுக மாவட்டச் செயலாளர் மகனுக்கு திருமணம் செய்துவைக்க முடியாது. இங்கு சாதி, மத தீண்டாமையைவிட கொடுமையான அரசியல் தீண்டாமை உள்ளது. கர்நாடகாவில் தமிழக முதல்வர் படத்தை அவமதிக்கிறார்கள்.
இது அநாகரிக செயல் என முதல்வரோ, திமுகவின் 2-ம் கட்ட தலைவர்களோ, திமுக கூட்டணி கட்சித் தலைவர்களோ அறிக்கை வெளியிடவில்லை. என்னைத் தவிர வேறு யாருமே கண்டிக்கவில்லை. முதல்வர் தனது வீட்டுக்கு தண்ணீர் கேட்கவில்லை. தமிழகத்துக்குதான் தண்ணீர் கேட்டார். அவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு, தமிழகத்துக்கு ஏற்பட்ட அவமதிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.