Published : 23 Dec 2017 09:49 AM
Last Updated : 23 Dec 2017 09:49 AM

2ஜி அலைக்கற்றை வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை கிடைக்காது: திருமாவளவன் கருத்து

2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு குறித்து மேல்முறையீடு செய்தாலும் தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சி விமானநிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:

ஏராளமான விதிமீறல்கள் இருந்தபோதிலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்றுள்ளது ஆறுதல் அளிக்கிறது. இங்கு, திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என நம்புகிறேன்.

2ஜி அலைக்கற்றை வழக்கில் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தவர்களுக்கு, ஏமாற்றமளிக்கும் வகையில் தீர்ப்பு அமைந்துள்ளது. வழக்கு தொடர் பாக எந்தவிதமான ஆதாரங்களையும் சிபிஐ சமர்ப்பிக்கவில்லை என நீதிபதி கூறியிருப் பது அதிர்ச்சியளிக்கிறது. சிபிஐ மீதான நம்பகத்தன்மை முற்றிலும் தகர்ந்து போய் உள்ளது.

அரசு கோப்புகளில் உள்ள தகவல்களை, தனது அதிகார வரம்புகளை மீறி வெளிப்படுத்திய முன்னாள் கணக்கு தணிக்கை அலுவலர் வினோத்ராய் மீது கிரிமினல் வழக்கு தொடர வேண்டும்.

கீழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், சாட்சிகளைத் தாண்டி மேல்முறையீட்டின்போது புதிதாக வேறு எதுவும் விசாரணை நடத்த முடியாது. அளிக்கப்பட்ட தீர்ப்பிலுள்ள குறைபாடுகளை சீராய்வு மட்டுமே செய்ய முடியும். எனவே, மேல்முறையீடு செய்தாலும் தண்டனை கிடைக்க வாய்ப்பில்லை.

திமுக- பாஜக கூட்டணி

எதிர்காலத்தில் திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்க உள்ளதாக கூறுவது கற்பனையானது. அதற்கான தேவை இரு கட்சிகளுக்கும் இல்லை. ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு திமுக கூட்டணியை வலுப்படுத்தும் என்றார்.

திமுகவுடன் கூட்டணி

கும்பகோணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பேரிடரால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்துக்கு பெயரளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நீதி போதுமானதல்ல, கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும்.

உலக அளவில் 2ஜி அலைக்கற்றை பிரச்சினையைக் கூறி, நம் தேசத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்திவிட்டனர். இந்த பிரச்சினையால்தான் கடந்த 2011, 2016 தேர்தல்களில் திமுக கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

மதசார்பற்ற சக்திகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் போட்டியிட்டோம். 2019-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மதசார்பற்ற திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம்.

அயோத்தி விவகாரம் குறித்து இந்து மக்களிடம் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். நான் இந்து மதத்தை வெறுப்பவன் இல்லை. 450 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய ராமர் கோயிலை இடித்தனர். தற்போது அந்த ராமர் கோயிலை அதே இடத்தில் கட்டுவேன் என்றால், புத்த விகாரைகள், சமண கோயில்களை இடித்த இடத்தில், மீண்டும் அதே புத்த, சமண கோயில்களை கட்ட வேண்டும் என்று கூறினேன். இதை சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x