Published : 30 Sep 2023 10:36 PM
Last Updated : 30 Sep 2023 10:36 PM
குன்னூர்: தென்காசியில் இருந்து உதகைக்கு வந்த சுற்றுலா பயணிகள் திரும்பும் போது குன்னூர் மலைப்பாதையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமுற்று குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்காசி கடையம் பகுதியில் இருந்து 54 பேர் உதகைக்கு பேருந்தில் சுற்றுலா வந்தனர். சுற்றுலா முடிந்து குன்னூர் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் நேற்று வீடு திரும்பினர். பேருந்து மரப்பாலம் அருகே வளைவில் திரும்பும்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.
மீட்புப்பணிகள் தீவிரம்: இதில் பேருந்தில் இருந்த பயணிகள் அலறல் சத்தம்கேட்டு வாகன ஓட்டுநர்கள், தீயணைப்பு துறையினர், காவலதுறையினருக்கு தகவல் அளித்தனர். வாகன ஓட்டுநர்கள், தீயணைப்பு துறையினர், காவல்துறையினர், வருவாய் துறையினர் கயிறு கட்டி பேருந்தில் சிக்கியவர்களை மீட்டனர். 10க்கும் மேற்பட்டோரை 108 ஆம்புலன்ஸ்களில் குன்னூர் அரசு லாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலர் உயர் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் மற்றும் கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவம் குறித்து அறிந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா, கோவை சரக டிஐஜி சரவணசுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
8 பேர் உயிரிழப்பு: இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த முப்புடாதி (வயது 67), முருகேசன் (வயது 65), இளங்கோ (வயது 64), தேவிகலா (வயது 42), கௌசல்யா (வயது 29) மற்றும் செல்வன். நிதின் (வயது 15) ஆகியோர் உள்ளிட்ட எட்டு பேர் உயிரிழந்தனர். இதில், ஒருவரின் அடையாளம் காண முடியவில்லை என கூறப்படுகிறது. இவர் ஓட்டுநராக இருக்காலம் என கூறப்படுகிறது.
மேலும், பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்கள் குன்னூர், மேட்டுப்பாளையம் மற்றும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பட்டு வருகின்றனர்.
குன்னூர் மருத்துவமனையில் சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் பழனிசாமி தலைமையில் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன், முன்னாள் அரசு கெளறடா பா.மு.முபாரக், மாவட்ட ஆட்சியர் மு.அருணா, காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் மற்றும் அதிகாரிகள் குன்னூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், இரவு நேரம் காரணமாக இருள் சூழ்ந்துள்ளதால் விபத்து பகுதியில் மின் விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டு தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்தன.
போக்குவரத்து மாற்றம்: விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்புப்பணிகள் நடந்ததால், குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. உதகை மற்றும் குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற பேருந்துகள் கோத்தகிரி மார்க்கமாக திருப்பி விடப்பட்டன. மேலும், மேட்டுப்பாளையம் இருந்து உதகை நோக்கி வரும் வாகனங்கள் கோத்தகிரி மார்க்கமாக இயக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT