Published : 25 Jul 2014 10:00 AM
Last Updated : 25 Jul 2014 10:00 AM

முதல்வரால் பெயர் சூட்டப்பட்ட புலிக்குட்டிகளை பார்வையிடலாம்: வண்டலூர் பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் பெயர் சூட்டப்பட்ட 5 புலிக்குட்டிகளை பார்வையாளர்கள் காண்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவின் இயக்குநர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த 5 புலிக்குட்டிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த மே மாதம் பெயர் சூட்டினார். அனு என்ற வெள்ளை தாய்ப் புலி ஈன்றெடுத்த 2 பெண் புலிக் குட்டிகளுக்கு தாரா மற்றும் மீரா என்றும், ஒரு ஆண் குட்டிக்கு பீமா என்றும் நம்ருதா என்ற வெள்ளை தாய்ப் புலி ஈன்றெடுத்த 2 ஆரஞ்சு நிற ஆண் புலிக்குட்டிகளுக்கு ஆதித்யா மற்றும் கர்ணா என்றும் முதல்வர் பெயர் சூட்டியிருந்தார்.

புலிகள் வளர்ந்து வந்த நிலையில் பார்வையாளர்களின் வேண்டுகோளின்படி அவற்றின் அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, பார்வையாளர்கள் காணும் வகையில் வெளியே 27 அங்குல எல்சிடி திரை அமைக்கப்பட்டிருந்தது. புலிக்குட்டிகள் தற்போது நன்கு வளர்ந்து புதிய சூழலை தாக்குப்பிடிக்கும் நிலையில் உள்ளன. இதையடுத்து, இந்த புலிகளை மற்ற புலிகளுடன் திறந்த வெளி அடைப்பிடங்களில் சேர்ந்து வாழவிடுவது என முடிவு செய்யப்பட்டது.

புலிக்குட்டிகளை ஈ, பேன், உண்ணி, சிற்றுண்ணி போன்றவை தாக்காமல் இருக்க திறந்த வெளி அடைப்பிடங்களில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்டு உரிய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து வெள்ளைப்புலி திறந்தவெளி அடைப்பிடத்தில் தாய்ப்புலி அனுவுடன் அதன் 3 புலிக்குட்டிகளும், புலிகள் இனப்பெருக்க மையத்தில் தாய்ப் புலி நம்ருதாவுடன் 2 ஆரஞ்சு நிற புலிக்குட்டிகளும் விடப்பட்டுள்ளன.

இவற்றை பொதுமக்கள் காண்பதற்கு வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. தற்பொழுது பூங்காவில் வெள்ளைப்புலிகளின் எண்ணிக்கை 14 ஆகவும், ஆரஞ்சு நிற புலிகளின் எண்ணிக்கை 9 ஆகவும் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x