ஓசூர் கடைகளில் அதிரடி சோதனை: சிரிஞ்ச் சாக்லெட்கள் பறிமுதல்

ஓசூர்  நாமல்பேட்டை பகுதியில்  உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிரிஞ்ச் சாக்லெட்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஓசூர் நாமல்பேட்டை பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிரிஞ்ச் சாக்லெட்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

ஓசூர்: ஓசூரில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சிரிஞ்ச் சாக்லெட்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர பகுதிகளில் சிறுவர்களை கவரும் வகையில் சிரிஞ்ச் சாக்லெட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

இதில், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி இல்லாமல் போலி முகவரியுடன் விற்பனை செய்வதாகவும், இதனை உணவுப் பாதுகாப்புத் துறை ஆய்வு செய்து தடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்த செய்தி கடந்த 26-ம் தேதி `இந்து தமிழ் திசை’ நாளிதழில் வெளியானது.

இது தொடர்பாக, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, ஆட்சியர் சரயு உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் வெங்கடேசன் அறிவுறுத்தலின் பேரில் ஓசூர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையிலான குழுவினர், ஓசூர் பஜார், நாமல்பேட்டை, எம்ஜி ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் சிரிஞ்ச் சாக்லெட்டுகள் உள்ளனவா என ஆய்வு செய்தனர்.

இதில், சுமார் 2.5 கிலோ சிரிஞ்ச் சாக்லெட்டுகளை பறிமுதல் செய்து அவற்றிலிருந்து உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வுக் கூடத்திற்கு அனுப்பினர். இதுகுறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலர் முத்துமாரியப்பன் கூறும்போது, பறிமுதல் செய்யப்பட்ட சாக்லெட்டுகளில் தயாரிப்பு தேதி, பேட்ச் நம்பர், உரிமம் எண் எதுவும் இல்லை.

அதேபோல் யாரிடமிருந்து வாங்கப்பட்டது என்பதற்கான பில்லும் விற்பனையாளர்களிடம் இல்லை. இதனால், சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்ட விதிகளின் படி நோட்டீஸ் வழங்கி உள்ளோம். ஆய்வு அறிக்கை அடிப்படையில் கடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இதுபோன்று முறையான லேபிள் அறிவிப்பு இல்லாத உணவுப்பொருட்களை வாங்கி விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in