

சென்னை: வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில், பாதிக்கப்பட்ட 18 பழங்குடியின பெண்களுக்கும் அரசு வேலையுடன் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்குமாறு தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனத் துறை, காவல் துறை, வருவாய் துறையை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையையும் நீதிமன்றம் உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் அரூர் - பாப்பிரெட்டிபட்டி இடையே கல்வராயன் மலைத்தொடரின் அடிவாரப் பகுதியில் உள்ள வாச்சாத்தி மலை கிராமத்தினர் சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டதாக கடந்த 1992 ஜூன் 20-ம் தேதி 155 வனத் துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய் துறையினர் கூட்டாக சோதனை நடத்தினர்.
அப்போது, வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். 90 பெண்கள் உட்பட 133 பேரை கைது செய்து, ஊர் நடுவே இருந்த ஆலமரத்தடிக்கு அழைத்து வந்துள்ளனர். அன்று மாலை, ஏரிக்கரையில் மறைத்து வைத்துள்ள சந்தனமரக் கட்டைகளை எடுத்து தருமாறு கூறி, 18 இளம்பெண்களை மட்டும் தனியாக அழைத்துச் சென்று, வனத் துறையினரும், காவல் துறையினரும் ஏரிக்கரையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், வன்கொடுமை தொடர்பாக போலீஸார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
அப்போது தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்த சண்முகம், அரூர் முன்னாள் எம்எல்ஏ அண்ணாமலை, தேசிய பழங்குடியின, பட்டியலின மக்கள் நல ஆணையம், மகளிர் அமைப்பினர் எடுத்த முயற்சிகளின் பலனாக, இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 1993-ல் உத்தரவிட்டது. சிபிஐ 2 ஆண்டுகள் விசாரணை நடத்தி, 1995-ல் வழக்குபதிவு செய்தது. குற்றத்தில் ஈடுபட்டதாக 155 வனத் துறையினர், 108 காவல்துறையினர், 6 வருவாய் துறையினர் என 269 பேரை கைது செய்தது.
பின்னர், இந்த வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி குமரகுரு கடந்த 2011 செப்.29-ம் தேதி, இச்சம்பவத்தில் ஈடுபட்டு அப்போது உயிருடன் இருந்த215 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளித்தார். இதில் 12 பேருக்கு 10 ஆண்டுகளும், 5 பேருக்கு 7 ஆண்டுகளும், மற்றவர்களுக்கு 1 முதல் 3 ஆண்டுகள் வரையும் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், 12 ஆண்டுகள் கழித்து, அதேநாளான (செப்.29) நேற்று தீர்ப்பு அளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ஈவு இரக்கம் இல்லாதவர்கள்: மொத்தம் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 13 வயது சிறுமி, 8 மாத கர்ப்பிணியைக்கூட விட்டுவைக்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈவு இரக்கமோ, மனிதாபிமானமோ இல்லாமல் அரக்கத்தனத்துடன் செயல்பட்டுள்ளனர்.
சந்தனமரக் கடத்தலில் ஈடுபட்டவர்களை அரசுப் பணி நிமித்தமாகவே கைது செய்ததாகவும், அதற்கு பழிவாங்கும் விதமாகவே பொய்யான பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அப்பாவி இளம்பெண்களை வன்கொடுமை செய்வது அரசுப் பணி கிடையாது. சந்தனமரக் கடத்தலில் ஈடுபடும் பெரும் புள்ளிகளை காப்பாற்றும் நோக்கில் வனத் துறை, காவல் துறையினர் ஒட்டுமொத்த கிராமத்தையும் பலிகடா ஆக்கியுள்ளனர். 5 நாட்களாக சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பெண்களை மறுநாள் நள்ளிரவு 12 மணிக்கு ரிமாண்ட் செய்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஒரு மாதம் கழித்தே வெளியே தெரியவந்துள்ளது. 3 ஆண்டுகளுக்கு பிறகே அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகே நீதிமன்ற விசாரணை தொடங்கியுள்ளது. சீருடை அணிந்த அரசு ஊழியர்கள்தான் குற்றம் செய்துள்ளனர் என்பதை சிபிஐ உறுதி செய்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது மாவட்ட அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். தவிர, பாதிக்கப்பட்ட வாச்சாத்தி பெண்களுக்கு பாதுகாப்பாக நிற்காமல், குற்றம் சாட்டப்பட்ட அரசு ஊழியர்களை காப்பாற்றும் நோக்கிலேயே அப்போதைய அரசும் செயல்பட்டது கண்டனத்துக்குரியது, துரதிர்ஷ்டவசமானது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் சரியான தீர்ப்பைதான் அளித்துள்ளது என்பதால் மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நானும் உறுதி செய்கிறேன்.
பண உதவியும், நிரந்தர அரசு வேலையும்தான் இந்த வேதனைக்கு தீர்வாக இருக்க முடியும். எனவே, பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் அரசுவேலையுடன் தலா ரூ.10 லட்சத்தை தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும். வாச்சாத்தி கிராமத்தினரின் மறுவாழ்வுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
குற்றத்தை மூடி மறைத்த அப்போதைய தருமபுரி ஆட்சியர், எஸ்.பி.,மாவட்ட வனத் துறை அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களை சிறையில் அடைக்க கீழமை நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.