திருமயம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மீது பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு

திருமயம் அருகே தறிகெட்டு ஓடிய கார் மீது பேருந்து மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

புதுக்கோட்டை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கீழப்பூங்குடியைச் சேர்ந்தவர் நாராயணன் மனைவி ராஜேஸ்வரி(50). இவர், தனது மகன்கள் ஆதி முகிலன்(25), அகிலன்(20), உறவினர் ஆதிராமன் மகன் ஆதிசரண்(14) ஆகியோருடன் நேற்று கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேஸ்வரத்துக்கு காரில் சென்றுவிட்டு, ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியைச் சேர்ந்த பி.சந்தோஷ்(25) காரை ஓட்டினார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே செபஸ்தியார்புரத்தில், முன்னால் சென்ற காரை முந்திச் செல்ல முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. அப்போது, எதிரே சிவகங்கையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பேருந்து, கார் மீது மோதியது. இதில், பேருந்தின் அடியில் கார் சிக்கியது.

தகவலறிந்து வந்த தீயணைப்புப் படையினர், பொக்லைன் உதவியுடன் நீண்ட நேரம் போராடி பேருந்துக்குள் சிக்கிய காரை மீட்டனர். இந்த விபத்தில் ஆதிமுகிலன், ஓட்டுநர் சந்தோஷ் ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராஜேஸ்வரி, அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், காரில் பயணித்த ஆதிசரண், அகிலன் மற்றும் பேருந்தில்பயணித்த 4 பேர் பலத்த காயங்களுடன், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து தொடர்பாக நமணசமுத்திரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in