

அரூர்/சென்னை: வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 215 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டதை அறிந்த கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வாச்சாத்தி மலைக் கிராமத்தில் நடந்த வன்கொடுமை வழக்கில் தருமபுரி நீதிமன்றம் 215 பேருக்கு சிறைத் தண்டனை விதித்தது. இதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி பி.வேல்முருகன், தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தார். மேலும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கும் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு வழக்கறிஞர் இளங்கோ கூறும்போது, "பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், அதில் ரூ.5 லட்சத்தை அரசும், ரூ.5 லட்சத்தை பாலியல் வன்கொடுமை செய்தவர்களிடமிருந்து வசூலித்தும் தர வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அப்போதைய தருமபுரி ஆட்சியர், எஸ்.பி., வன அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறும் நீதிபதி வலியுறுத்தியுள்ளார்" என்றார்.
இந்நிலையில், வாச்சாத்தி சம்பவத்தின் அடையாளமாக கருதப்படும் பிரம்மாண்ட ஆலமரத்தின் கீழ் கூடியிருந்த பாதிக்கப்பட்ட 18 பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர், தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு வெளியானதும் மகிழ்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து அங்கு வந்த தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு, மாநில துணைத் தலைவர் கண்மணி, மாவட்ட நிர்வாகிகள் மல்லையன், அம்புரோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் குமார், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, தனுசன், குமார் உள்ளிட்டோர் அப்பகுதி மக்களுடன் இணைந்து பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தீர்ப்பைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தலைவர்கள் வரவேற்பு: வாச்சாத்தி வழக்கு தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிமாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: வாச்சாத்தி சம்பவம் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம்தொடர்ந்த வழக்கில் இன்று நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. இதை மனதார வரவேற்கிறோம். 31 ஆண்டுகளாக நியாயத்துக்காக போராடிய வாச்சாத்தி மக்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக நின்று போராடிய அனைவருக்கும் பாராட்டுகள். ஒடுக்கப்பட்ட, எளிய மக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகார வர்க்கத்தின் ஆணவப் போக்கிற்கு இது பலத்த அடி.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: வாச்சாத்தி பழங்குடி கிராமத்தில் அரசு நிர்வாகத்தின் அட்டூழியம் அரங்கேறியது. ஒட்டுமொத்த கிராமமக்கள் அனைத்தையும் இழந்து, வனத் துறையின் காட்டுமிராண்டித்தாக்குதலுக்கும், வன்புணர்வுக்கும் உள்ளானார்கள். இது தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வரவேற்கிறேன்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: வாச்சாத்தியில் வனம், காவல் துறையினரால் அரங்கேற்றிய கொடூரங்களும், வக்கிரங்களும் நினைத்துப் பார்க்க முடியாதவை. இதுதொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீண்ட அரசியல் மற்றும் சட்டப் போராட்டம் நடத்திய மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தந்துள்ளது.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தாமதமாக வழங்கப்பட்டாலும், இது வரவேற்கத்தக்க தீர்ப்பு. மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல், வனத் துறை அதிகாரிகளே குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது தவறான முன்னுதாரணம். தவறு செய்தவர்களுக்கு பாரபட்சமின்றி தண்டனை கிடைத்துள்ளதை வரவேற்கிறேன்.
தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்: குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை உறுதி செய்யும்வகையில் பிறப்பித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த தீர்ப்பை வரவேற்று, தமிழ்நாடு மலைவாழ்மக்கள் சங்கத்தினர், தாம்பரத்தில் உள்ள மாநிலக் குழு அலுவலகத்தில், மாநிலத் துணைத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.