

சேலம்: சென்னை கீழ்கட்டளை திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்தவர் பால் (70). இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ரோஸ் மார்கிரேட். ஈரோட்டில் உள்ள தனது சகோதரியை சந்திப்பதற்காக தனது மனைவியுடன் வந்தே பாரத் விரைவு ரயிலில் கடந்த 26-ம் தேதி சென்று கொண்டிருந்தார்.
ரயிலில் பெட்டியின் கதவு அருகே நின்றிருந்த பால், சேலம் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தபோது கதவு திறந்ததில் 5-வது நடைமேடை இல்லாத தண்டவாள பகுதியில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து சேலம் ரயில் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக விசாரணை செய்த ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ்குமார் சின்கா ரயில் பெட்டியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் சேலம் ரயில் நிலைய பகுதியில் இருந்த 2 ஊழியர்கள் வந்தே பாரத் ரயிலின் அவசரக் கதவு பட்டனை அழுத்தி திறந்து, ரயிலில் ஏறி மறுபுறம் உள்ள 4-வது பிளாட்ஃபார்மில் இறங்கிச் சென்றது தெரியவந்தது.
ஊழியர்கள் இருவரும் சென்ற நிலையில், ரயில் பயணி பால் ரயில் கதவின் மீது கை வைத்தபோது கதவு திறந்து அவர் கீழே விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இதையடுத்து, ரயில்வே பாயின்ட் மேன்களாக பணியாற்றி வரும் தாமரைச்செல்வன், மீனா இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து, ரயில்வே கோட்ட பொது மேலாளர் பங்கஜ்குமார் சின்கா உத்தரவிட்டுள்ளார்.