Published : 30 Sep 2023 06:34 AM
Last Updated : 30 Sep 2023 06:34 AM
அரூர்: வாச்சாத்தி வழக்கில் மேல் முறையீட்டு மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து ஏற்கெனவே தருமபுரி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளது. இதன்மூலம் குற்றம் சாட்டப்பட்ட 215 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப் பட்டுள்ளதை பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கூறியதாவது: இச்சம்பவத்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்த நிலையில், இதற்கு மருந்தாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு உள்ளது. இக்கட்டான காலக்கட்டத்தில் மலைவாழ் மக்கள் சங்கத்தின் உதவியோடு போராடிய எங்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சியை அளித்துள்ளது.
தீர்ப்பின் படி எங்களுக்கு கிடைக்க வேண்டிய உதவிகள், பாதிக்கப்பட்ட பெண்கள் 18 பேரின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்புகள் போன்றவற்றை உடனடியாக அரசு செய்து தரவேண்டும், எனகேட்டுக் கொண் டனர்.இவ்வழக்கில் ஆரம்பம் முதல் வாச்சாத்தி மக்களோடு இணைந்து பல்வேறு சட்டப் போராட்டங்களை மேற்கொண்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ டில்லிபாபு கூறியதாவது:
கடந்த 1992-ல் கிராமத்தையே சூறையாடி, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்துக்கு நல்லதொரு தீர்ப்பை பெற்றுள்ளோம். பல்வேறு வகைகளில் தொ டர்ந்து நீதிமன்றங்களின் வாயிலாக போராடியதன் மூலம் 19 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2011-ம் ஆண்டில் இதே நாளில் குற்றம் சாட்டப்பட்ட அனைவருமே குற்றவாளிகள் என தருமபுரி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
தண்டனைப் பெற்றவர்கள் மேல் முறையீட்டுக்கு சென்றனர். இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கடந்த மார்ச் 4-ம் தேதி பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் வந்து கள ஆய்வு செய்தார். அப்போதே எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
அதனை மெய்ப்பிக்கும் வகையில் 2011-ம் ஆண்டு தருமபுரி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 12 ஆண்டுகளுக்குப் பின்னர் அதே நாளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. 30 ஆண்டு கால போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்த தீர்ப்பு பழங்குடி மக்களின் வாழ்க்கையை புனரமைக்கும் வகையிலும், நம்பிக்கை அளிக்கும் வகையிலும் உள்ளது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT