Published : 30 Sep 2023 07:38 AM
Last Updated : 30 Sep 2023 07:38 AM

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மீண்டும் பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம்: சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம்

கோப்புப்படம்

சென்னை: சாலைகளில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகள் மீண்டும் பிடிபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், கூடுதல் ஆணையர் சங்கர்லால் குமாவத் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மீண்டும் பிடிபட்டால், அவற்றுக்கான அபராத தொகை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தற்போது சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் பிடிபட்டால் ரூ.2 ஆயிரம் அபராதம், பராமரிப்பு செலவாக நாளொன்றுக்கு ரூ.200 வசூலிக்கப்படுகிறது. இந்த மாடுகளால் ஏற்படும் இடையூறுகளை மேலும் கட்டுப்படுத்த அபராதத் தொகை ரூ.5 ஆயிரமாகவும், பராமரிப்பு செலவு 3-ம் நாள் முதல் நாளொன்றுக்கு ரூ.1000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

மீண்டும் அதே மாடுகள் பிடிபட்டால் அபராத தொகை ரூ.10 ஆயிரம்,பராமரிப்பு செலவு 3-ம் நாள் முதல் நாளொன்றுக்கு ரூ.1000 ஆக உயர்த்தி வசூலிக்க அனுமதி கோரிய தீர்மானம் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்ட குப்பையை பயோமைனிங் முறையில் ரூ.640 கோடியில் அகற்ற மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.180 கோடி கடன் பெறமாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் மொத்தம் 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பேசும்போது, மண்டல சுகாதார அலுவலர்கள், மருத்துவ அலுவலர்கள், பூச்சியியல் வல்லுநர் ஆகியோர் கண்காணிப்பின்றி சுற்றி வருகின்றனர். அவர்கள் எங்கு செல்கின்றனர் என்றே தெரியவில்லை. அவர்களை பயோமெட்ரிக் வருகை பதிவேடு வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்.

குறிப்பாக ராயபுரம் மண்டல சுகாதார அதிகாரி பணிக்கே வருவதில்லை. 6 முறை உரிய அனுமதிஇன்றி வெளிநாடு சென்று வந்துள்ளார் என புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த மேயர்,பொறியாளர்களை கண்காணிப்பது போன்று, சுகாதாரத் துறை அலுவலர்களின் பணிகளையும் கண்காணிக்க வேண்டும் என்று வட்டார துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டார்.

புளியந்தோப்பு இறைச்சிக் கூடத்தில் சுகாதாரமில்லை. முறையாக பராமரிப்பதுமில்லை. இதனால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த மேயர், இறைச்சிக் கூடம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. வட சென்னை வளர்ச்சி திட்டத்தில் நிதி ஒதுக்கி இறைச்சிக்கூடம் சீரமைக்கப்படும் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x