Published : 28 Jul 2014 10:00 am

Updated : 28 Jul 2014 11:29 am

 

Published : 28 Jul 2014 10:00 AM
Last Updated : 28 Jul 2014 11:29 AM

தேன் உற்பத்தியாளர்களுக்கு ‘கசக்கும்’ வாழ்வு! - வேதனை விளிம்பில் விவசாயிகள்

இனிப்பான தேனை உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை கசப்பாக மாறி வருகிறது. இந்திய அளவில் தேன் உற்பத்தியில் கன்னியாகுமரி மாவட்டம் முதலிடத்தில் இருப்பது இந்த மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கிறது.

மாவட்டத்தின் மேற்குப் பகுதியான மார்த்தாண்டம் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயல் பாகவே தேனீ வளர்ப்புக்கு ஏற்ற சூழல் நிலவுவதால், இங்கு ஆயிரக் கணக்கான குடும்பத்தினர் தேனீ வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வந் தனர். தற்போது தேனீ வளர்ப்பை கைவிட்டு, கூலி வேலைக்கு கேரளத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


பருவநிலை மாற்றம்

பருவ நிலை மாற்றம் பயிர்களை மட்டுமல்ல, உயிர்களையும் புரட்டிப் போடக் கூடியதுதான். பயிர்களில் ரசாயனத் தெளிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தேனீக்கள் தேன் சேகரிப்பதில் முன்பை விட சுணக்கம் ஒரு பக்கம் இருந்தாலும், தேனீக்களை துரத்தும் நோய்களாலும், தேனீ வளர்ப்புத் தொழிலுக்கு அரசு முன்னுரிமை கொடுக்காததாலும், கன்னியாகுமரி யில் தேனீக்கள் வளர்ப்பு கரைந்து வருகிறது.

மேல்புறம், திருவட்டாறு ஒன்றிய தேனீ வளர்ப்பாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஹென்றி கூறியதாவது:

கன்னியாகுமரி மாவட்டத்தில், 100 வருடங்களுக்கும் மேல் தேனீ வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இங்க மட்டும் 40,000 குடும்பத்தினர் நேரடியாகவும், மறைமுகமாகவும் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர். இங்குள்ள விவசாயிகள் கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் இல்லாமல், கேரளம், கர்நாடகாவிலும் தேனீப் பெட்டி களை வைத்து தேன் எடுக்குறாங்க.

ரப்பர் தோட்டத்தால் பயன்

ஆனால், தேன் உற்பத்திக்கு ஜீவாதாரமும், அட்சய பாத்திரமும் கன்னியாகுமரிதான். இயல்பாகவே மேற்கு மாவட்ட பகுதியில் ரப்பர் சாகுபடி அதிகம். இதனால், ரப்பர் தோட்டங்களில் அதிகமாக தேனீப் பெட்டிகளை வைச்சுருப்பாங்க. அயல் மகரந்த சேர்க்கை ஏற்பட்டு, ரப்பரிலும் மகசூல் கூடுவதோடு, தேன் உற்பத்தியும் கூடுதலாக இருக்கும். கடந்த 5 ஆண்டுகளில் தேன் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் குறைஞ்சு போச்சு. தேனீக்களும் அடிக்கடி நோய் வந்து செத்து போயிடுது. என்னதான் பக்குவமா பராமரிச்சாலும் முன்னாடி மாதிரி உற்பத்தியை கூட்ட முடியல.

தேனீக்களுக்கு நோய்

முட்டையிலிருந்து குஞ்சு வெளியே வந்த சில தினங்களில் அதாவது, ‘லார்வா’ பருவத்தில் குஞ்சுகள் அழுகி போச்சு..தேனீக்களில் 300-க்கும் அதிகமான ரகங்கள் இருக்குது. அதில் குமரி மாவட்ட சீதோஷண நிலைக்கு எந்த ரக தேனீ தாக்குப் பிடித்து வளரும்ன்னு சோதனை செய்து அந்த ரகத்தை வளர்க்கணும்.

இதேபோல் நோய் தொற்றினால் ஆலோசனை கூறவும், தேனீயில் புதிய ரகங்களை உருவாக்கவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஆராய்ச்சி மையம் அமைப்பது மட்டும்தான் தீர்வாக இருக்கும். இது சம்பந்தமாக பலருக்கும் மனு போட்டிருக்கோம். தேனீ ஆராய்ச்சி மையம் மட்டுமே எங்களின் கஷ்டத் துக்கு தீர்வாக இருக்கும்.என்றார்.

கொள்முதலுக்கு ஏற்பாடு

காஞ்சாம்புரம் கிராமத்தைச் சேர்ந்த தேன் உற்பத்தியாளர் மத்தியாஸ் கூறியதாவது:

ஆரம்பத்தில் ஆயிரக்கணக்குல தேன் பெட்டிகள் வைச்சு, தேன் எடுத்துட்டு இருந்தேன். இப்ப வெறும் 200 பெட்டிதான் வைச்சுருக்கேன். ‘குஞ்சலுகல்ன்னு’ ஒருவகை நோயால் தேனீக்கள் குஞ்சியாக இருக்கும்போதே அழிஞ்சுடுது. தேன் உற்பத்தியில் இவ்வளவு பெரிய பிரச்சினை இருப்பது அரசாங்கத்துக்கு தெரியுமா என்று கூட தெரியவில்லை.

தேன் அறுவடைக்கு வரும் சீசனுக்கு முன்பே, தேனுக்கான விலையை அரசு நிர்ணயிக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் வெளி மாநிலங்களில் தான் அதிகமாக தேனீப் பெட்டிகளை வைத்திருக்கிறார்கள். அங்கே சென்று அரசு கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது அந்த மாநிலங்களுடன் அரசு விவசாயிகளுக்கு ஒரு பிணைப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

ஆராய்ச்சி மையம் தேவை

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால், தேனீக்களுக்கு ஏற்படும் நோய் தொற்று குறித்து, புனேயில் உள்ள விஞ்ஞானிகள் வந்து ஆய்வு செய்து சென்றிருக்கின்றார்கள். கோவை பல்கலைக்கழக பூச்சியியல் துறை அதிகாரிகளும் அவ்வப்போது ஆலோசனை கூறி வருகிறார்கள். எனினும், தேன் தொழிலை மட்டுமே பிரதானமாக நம்பியிருக்கும் மார்த்தாண்டத்தில் பிரத்யோக ஆராய்ச்சி மையம் உருவாக்குவது மட்டுமே தீர்வாக இருக்கும்.


தேன் உற்பத்திவிவசாயிகள்கன்னியாகுமரி மாவட்டம்தேனீ வளர்ப்புதொழில் முடக்கம்நஷ்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x