

பழநி: வார்டு பணிகளுக்கு நிதி இல்லாத நிலையில், பேனா, பேப்பர் வாங்குவதற்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்குவது தேவைதானா என பழநி நகராட்சிக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர்.
பழநி நகராட்சி கூட்டம் தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பாலமுருகன், பொறியாளர் பாண்டித்தாய், நகர் நல அலுவலர் மனோஜ்குமார், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், நகரமைப்பு அலுவலர் ஜெயந்திரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அனைத்து வார்டுகளிலும் மழைநீர் வடிகாலில் மணலை அகற்றுதல், வார்டு வாரியாக ஓவியம் மூலம் என் குப்பை என் பொறுப்பு, மரக்கன்று நடுதல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கடை வீதியில் உள்ள நகராட்சிப் பள்ளியில் ரூ.30 லட்சம் செலவில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நடந்த விவாதம் பின்வருமாறு: துணைத் தலைவர் கந்தசாமி (மார்க்சிஸ்ட்): பழநியில் உழவர் சந்தை முன் உள்ள கடைகளை முறைப்படுத்த வேண்டும். தினமும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வார்டு பணிகளுக்கு ரூ.1 லட்சம் நிதி ஒதுக்க முடியாத நிலையில், நகராட்சிக்கு எழுது பொருட்கள், ஏ4 பேப்பர், பதிவேடு வாங்குவதற்கு ரூ.10 லட்சம் தேவைதானா?. நிதி இல்லாத காரணத்தினால் எனது வார்டில் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
சுரேஷ்(திமுக): மழைக்காலம் தொடங்கி விட்டது. வடிகால்களை தூர்வாராததால் மழைநீர் வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. கொசு தொல்லையால் மலேரியா பரவும் சூழல் நிலவுகிறது. இதனை தடுக்க வேண்டும்.
கவுன்சிலர்கள்: சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு ரூ.500 முதல் ரூ.10,000 வரை வசூலிப்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இதனை, மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
ஆணையர்: சொத்துவரி பெயர் மாற்றத்துக்கு கட்டணம் வசூலிக்க அரசாணை வந்துள்ளது.
நடராஜன் (அதிமுக): 33 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளுக்கு வீட்டு வரியை குறைக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.