

கேரள மாநிலத்தில் பறவை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருவதன் காரணமாக அண்டை மாநிலங்களுக்கும் இந்நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம், கொச்சின், எர்ணாகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் நோய் பாதிப்பு பதிவாகி வருகிறது. இந் நோயின் தாக்கத்தால் கேரளத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், 50-க்கும் மேற்பட்டோருக்கு நோயின் தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது.
கேரளத்தில் வேகமாக பரவி வரும் பறவை காய்ச்சலை, தமிழகத்தில் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கேரள மாநிலத்தின் அருகில் உள்ள கோவை மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம், தேனி மாவட்டங்கள் வழியாக நாள்தோறும் லட்சக்கணக்கானோர் கேரளத்திற்கு சென்று வருகின்றனர். தினமும் கோழி, முட்டை, மாடுகள் மற்றும் பல்வேறு உணவுப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்நிலையில் பறவை காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு, அதற்குண்டான சுகாதார மற்றும் தடுப்பு நடவடிக்கை விரைந்து மேற்கொள்ளாவிட்டால் இங்கு பாதிப்பு பரவும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து வனம் அமைப்பின் நிர்வாகி சந்திரசேகர் கூறுகையில், கடந்த காலங்களில் இது போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டபோது மாநில எல்லையோரங்களில் நோய் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை கேரளத்தில் இந்த காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் சுகாதார துறையினரும் மாவட்ட நிர்வாகங்களும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகின்றனர் என்றார்.
இது குறித்து சுகாதார துறை துணை இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், மாநில அரசிடம் இருந்து பறவை காய்ச்சல் குறித்து எவ்வித அறிவுறுத்தலும் வரவில்லை. உத்தரவு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.