Published : 29 Sep 2023 05:23 AM
Last Updated : 29 Sep 2023 05:23 AM
உதகை: உதகை அரசு கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு துறைகளை மாற்றவும், விடுதி ஒதுக்கீடு செய்யவும் பணம் பெற்ற கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுஉள்ளனர்.
உயர்கல்விக்கான வசதி வாய்ப்புகளை குறைவாக கொண்டிருக்கும் மலை மாவட்டமான நீலகிரியில், அரசு கல்லூரிகளை நம்பியே பெரும்பாலான மக்கள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் உதகை அரசு கலைக் கல்லூரி, மாவட்டத்தின் முக்கிய கல்லூரியாக இருந்து வருகிறது. பழங்குடியினர், தோட்டத் தொழிலாளர்கள் என வறுமையான பின்னணியைக் கொண்ட முதல் தலைமுறை மாணவ, மாணவிகள் இந்த கல்லூரியில் அதிக அளவில் பயின்று வருகின்றனர்.
உதகை அரசுக் கலைக் கல்லூரியின் முதல்வராக அருள் ஆண்டனி கடந்த ஜூன் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த கல்லூரியில் மாணவர் சேர்க்கை, துறை மாறுதல், தங்கும் விடுதி வசதி போன்றவற்றுக்கு மாணவ, மாணவிகளிடம் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் சிலர் ஆயிரக்கணக்கில் லஞ்சமாகப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், லஞ்சம் வாங்கியதற்கான ஆடியோ, ஸ்க்ரீன் ஷாட் என சில ஆதாரங்கள் இணையத்தில் பரவி, பரபரப்பை ஏற்படுத்தின.
இதுகுறித்து செய்திகள் வெளியான நிலையில், கல்லூரி கல்வி இயக்ககத்தின் கோவை மண்டல இணை இயக்குநர் கலைச்செல்வி தலைமையில், ஊழல் புகார் குறித்து விசாரணை நடைபெற்றது.
வீடியோவால் பரபரப்பு: இந்நிலையில், ஆதிதிராவிடர் மாணவர்களை அரசு தங்கும் விடுதியில் சேர்க்க, கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.இதைத் தொடர்ந்து உயர் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், உதகை அரசு கலைக்கல்லூரி முதல்வர் அருள் ஆண்டனி மற்றும் பேராசிரியர் ரவி ஆகியோர் மாணவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கல்லூரி கல்வி இயக்ககம் இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் மட்டுமின்றி, இந்தகல்லூரியில் வேறு சில பேராசிரியர்களும் இது போன்று மாணவர்களுக்கு துறைகள் மாற்றுவதற்கும், பல்வேறு காரணங்களுக்காகவும் பணம் பெறுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே, உதகை அரசு கலைக்கல்லூரியில் முறையாக விசாரணை மேற்கொண்டால் மேலும் பலரும் சிக்க வாய்ப்புள்ளது என்று மாணவர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் மேலும் கூறும்போது, ‘நீலகிரி மாவட்டத்தில் ஏழை மாணவர்கள் உயர் கல்வி படிக்க நம்பியிருப்பது அரசு கலைக் கல்லூரியை தான். நடப்பு கல்வியாண்டில் உதகை கல்லூரியில் ஏகப்பட்ட ஊழல் நடந்திருக்கிறது.
அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்திருக்கின்றனர். பலருக்கு ரசீது கொடுக்கப்படவில்லை. ஆதிதிராவிட மாணவர்களுக்கான ாஸ்டல் வசதிக்கு ரூ.10,000 வரை வாங்கியிருக்கின்றனர். ஒருமாணவரிடம் ரூ.3,000 கவரில் வாங்கும் வீடியோ வெளியாகி இருக்கிறது.
முதல்வர் மட்டுமின்றி, பேராசிரியர்கள் சிலரும் இந்த ஊழலில் சம்பந்தப்பட்டிருக்கின்றனர். முறையான விசாரணை நடத்தினால் பலரும் சிக்குவார்கள்’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT