Published : 29 Sep 2023 05:27 AM
Last Updated : 29 Sep 2023 05:27 AM

பட்டுக்கோட்டை அருகே மதுபானம் விற்றதாக விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் உயிரிழப்பு: போலீஸார் தாக்கியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு

பட்டுக்கோட்டையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்ட வீரையனின் உறவினர்கள்.

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே மதுபானம் விற்றதாக போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டவர் திடீரென உயிரிழந்தார். அவரை போலீஸார் தாக்கியதால் உயிரிழந்ததாகக் கூறி, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகேயுள்ள தாமரங்கோட்டை உம்பளகொள்ளை பகுதியைச் சேர்ந்தவர் வீரையன்(52). இவர் பழஞ்சூர் நசுவினி ஆற்று பாலத்தில் மதுபான பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. தகவலறிந்த பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு தலைமைக் காவலர் குணசீலன் நேற்று முன்தினம் அங்கு சென்று, தனது இருசக்கர வாகனத்தில் அவரை ஏற்றிக் கொண்டு, அருகில் இருந்த டாஸ்மாக் கடைக்கு அழைத்துச் சென்று அங்கிருந்த விற்பனையாளர் ராதாகிருஷ்ணனிடம் விசாரித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, அங்கிருந்து வீரையனை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றபோது, நெஞ்சு வலிப்பதாக கூறி வீரையன் மயங்கியுள்ளார். இதையடுத்து, வீரையன் மகன் முருகேசனை போலீஸார் வரவழைத்து அவரிடம் வீரையனை ஒப்படைத்தனர்.

பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வீரையன் சேர்க்கப்பட்டார். அங்கு, அன்றிரவு வீரையன் உயிரிழந்தார்.

வீரையன்

இதையடுத்து, வீரையனின் உறவினர்கள் நேற்று பட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்துக்குச் சென்று தலைமைக் காவலர் குணசீலன் தாக்கியதால்தான் வீரையன் உயிரிழந்துள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும், குணசீலன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் எனக் கூறி வீரையனின் உறவினர்கள் டிஎஸ்பி அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, வீரையன் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரி முழக்கங்களை எழுப்பினர்.

டிஎஸ்பி பிரித்திவிராஜ் சவுகான், வட்டாட்சியர் ராமச்சந்திரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், தலைமைக் காவலர் குணசீலன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிற கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, போராட்டத்தை முடித்துக் கொண்ட வீரையனின் உறவினர்கள், விரைவில் இழப்பீடு, வேலை வழங்காவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x