

குன்னூர்: ‘என் மண், என் மக்கள்' பாத யாத்திரை மேற்கொள்ள, நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு நேற்று மதியம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வந்தார்.
சிம்ஸ் பார்க் பகுதியில் தொடங்கி பெட் ஃபோர்டு, அரசு லாலி மருத்துவமனை, பேருந்து நிலையப் பகுதியில் பாத யாத்திரை முடிந்தது. இதைத் தொடர்ந்த நடைபெற்ற கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது: காமராஜர் ஆட்சியில் நீலகிரி மாவட்டத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி குந்தா, எமரால்டு, கெத்தை உட்பட பல்வேறு அணைகள் கட்டப்பட்டன.
இதன் மூலமாக நீலகிரி மாவட்டத்தில் 830 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தின் தேவை போக அண்டை மாவட்டத்துக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் உள்ள நீலகிரியில், வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லாதது உட்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.
மேலும், நீலகிரியில் சர்வதேச பள்ளிகள் அதிகம் உள்ளன. ஆனால், இங்கு படிக்க ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வரை செலவாகும் என்பதால், அனைத்து தரப்பு மக்களாலும் இப்பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க முடியாது. எனவே, சாதாரண மக்களும் கல்வி பெறுவதற்காக நாடு முழுவதும் 625 நவோதயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதில், நாடு முழுவதும் 2,78,356 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் 89 சதவீதம் பேர் கிராமப் புறத்தை சேர்ந்தவர்கள். 25 சதவீதம் பேர் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். கேரளாவில் 16, கர்நாடகாவில் 28, ஆந்திராவில் 15, தெலங்கானாவில் 9 நவோதயா பள்ளிகள் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு பள்ளிக்கூட இல்லை.
மும்மொழி கொள்கை என்ற காரணத்தை காட்டி, தமிழக அரசியல்வாதிகள் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் செயல்பட அனுமதி மறுக்கின்றனர். ஆனால், நவோதயா பள்ளிகளை பொறுத்தவரை 6 முதல் 8-ம் வகுப்பு வரை, அந்தந்த மாநில மொழிகளில் தான் கல்வி கற்பிக்கப் படுகிறது.
பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மாவட்டத்துக்கு இரண்டு நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இதன் மூலமாக, ஏழை, எளிய குழந்தைகளுக்கு உலகத்தரம் வாய்ந்த நவீன கல்வி கிடைக்கும். நவோதயா பள்ளிகளை பொறுத்தவரை, ஒரு குழந்தைக்கு ஆண்டுக்கு ரூ.85 ஆயிரம் மட்டும்தான் செலவாகும்.
மத்திய அரசு தயாராக இருந்தாலும், நவோதயா பள்ளிகளை அனுமதிக்க தமிழக அரசு தயாராக இல்லை. 2024 மக்களவைத் தேர்தலில், மூன்றாவது முறையாக நரேந்திரமோடி பிரதமர் ஆவார். அப்போது. நீலகிரி தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா எம்.பி.-யை அனுப்பநீங்கள் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.