சென்ட்ரல் சதுக்கத்தில் பிரம்மாண்ட 27 மாடி கட்டிடம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்

சென்ட்ரல் சதுக்கத்தில் பிரம்மாண்ட 27 மாடி கட்டிடம்: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்ட்ரல் சதுக்கத்தில் 27 மாடி கட்டிடம் கட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. புறநகர் ரயில்கள், நீண்ட தூர ரயில்கள், மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் மக்கள்எளிதாகச் சென்று வரும் வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சென்ட்ரல் சதுக்கம் வடிவமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச்சில் திறக்கப்பட்டது. இது, சென்னை நகரின் அடையாளமாக மாறியுள்ளது. இங்கு லட்சக்கணக்கான மக்கள்நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், இங்கு 27 மாடிக் கட்டிடம் விரைவில் அமைக்கப்பட உள்ளது. முதல் கட்டமாக, 8 நிலைகளுடன் கூடிய பிரம்மாண்டமான வாகன நிறுத்துமிடம் தயாராக உள்ளது. 1,500 இருசக்கர வாகனங்கள் மற்றும்400 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 1,900 வாகனங்கள் நிறுத்தும் விதமாகத் தயாராக உள்ளது.

முதலில், இங்கு ஒரு 33 அடுக்கு கட்டிடத்தை கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர்.பின்னர் சில காரணங்களுக்காக, 31 மாடிக் கட்டிடமாக மாற்றப்பட்டது. இதன்பிறகு, அடுக்குமாடி கட்டிடத்துக்குப் பதிலாக இரட்டை கோபுர கட்டிடங்களைக் கட்டலாம் எனமுடிவு செய்தனர். அதன்படி, முதல் கட்டிடம் 17 தளங்களையும், மற்றொன்று 7 தளங்களையும் கொண்டதாகவும் இருக்கும் என்று முடிவு செய்தனர். அதிலும் சிக்கல் இருக்கவே இறுதியில், 27 மாடிகளைக் கொண்ட ஒரே கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்துள்ளனர்.

சென்னை சென்ட்ரலுக்கு வரும் பயணிகள் வாகனங்களை நிறுத்த பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். வரும் காலத்தில், வாகன நெரிசல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு இந்த மெகா கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரு கட்டிடங்களை அமைக்கும் திட்டமே முதலில் இறுதி செய்யப்பட்டது, இருப்பினும், ஏற்கெனவே இங்குபோக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நிலையில், 2 கட்டிடம் என்பது அதை மேலும் மோசமாக்கும் என்பதால், மாற்றுத்திட்டங்கள் யோசிக்கப்பட்டன. தற்போது, 27 மாடிகளைக் கொண்ட ஒரே கட்டிடத்தைக் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in